ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது கோலி படை

share on:
Classic

சிட்னி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததை அடுத்து, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று, கோலிபடை சரித்திரம் படைத்துள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம், சிட்னியில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி, புஜாரா, ரிஷப் பண்ட் ஆகியோரின் அபார சதத்தால், முதல் இன்னிங்சில் 622 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, குல்தீப் யாதவின் சுழலில் சிக்கி, முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணிக்கு இந்தியா ஃபாலோ-ஆன் வழங்கியது. தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக 4வது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி 316 ரன்கள் பின்தங்கிய நிலையில், மழை காரணமாக கடைசிநாள் ஆட்டமும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தன்வசப்படுத்தியது. அத்துடன், ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth