புல்வாமா தாக்குதலுக்கு இவர்கள் தான் காரணம்...! ஜெய்ஷ்-இ-மொஹம்மத் அமைப்பின் கதை

share on:
Classic

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி 40-க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்பு படை வீரர்களை வீர மரணமடையச் செய்த அமைப்பு தான் ஜெயிஷ்-இ-மொஹம்மத்... 

ஜெய்ஷ்-இ-மொஹம்மத் உருவாக்கம்:
இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தால் எப்போது மோதல் வெடித்ததோ அப்போதே சில பிரிவினைவாத குழுக்கள் முளைக்க ஆரம்பித்து விட்டன. தாலிபன், லஷ்கர் இ தொய்பா, அல்கொய்தா உள்ளிட்ட மிகப்பெரிய தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானுக்கு வெளியே அட்டகாசம் செய்துகொண்டிருந்த அதே நேரம் காஷ்மீரில் பிரிவினையை ஏற்படுத்த சில அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என மறைமுகமாக முடிவு செய்தது பாகிஸ்தான். அரசு நேரடியாக தலையிட்டால் எங்கே பிரச்சனை வந்துவிடுமோ? என்ற பயம் காரணமாக தீவிரவாத குழுக்களை உருவாக்கி அதன் மூலம் நினைத்ததை சாதித்து தப்பித்துக்கொள்ள நினைத்தது பாகிஸ்தான் அரசு. இதனொரு பகுதியாக, மசூத் அசார் என்பவனால் கடந்த 2000-ஆம் ஆண்டு ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருந்தது பாகிஸ்தான் அரசின் ’இடை சேவைகள் புலனாய்வு’ அமைப்பான ’ஐ.எஸ்.ஐ’ தான்....

 

நோக்கங்கள்:
காஷ்மீரை இந்தியாவிலிருந்து எப்படியாவது பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்தின் ஆசை சில நாட்களிலேயே வெறியாக மாறியது. மேலும், ஆஃப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட  வேண்டும் என்பதும் அந்த இயக்கத்தின் பிரதான நோக்கத்தில் ஒன்றாக இருந்தது. ’கோழைத்தனமான போருக்கு போகும் முன்பாக பயிற்சி வேண்டும்’ என்பதற்காக ஆஃப்கான் நாட்டிற்கு சென்ற ஜெயிஷ் இ மொஹம்மத் அமைப்பினர் தாலிபன்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறத் தொடங்கினர். பயிற்சியை நிறைவு செய்ததன் பிறகு 10,000-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பில் இணைந்து செயல்பட முனைந்தனர். 

கொடூர தாக்குதல்கள்:
இந்த தீவிரவாத அமைப்பின் முதலாவது தற்கொலைப்படைத் தாக்குதல் கடந்த 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று காஷ்மீரில் நடத்தப்பட்டது. இக்கொடூர தாக்குதலில் சிக்கி இந்திய வீரர்கள் 5 பேர் வீர மரணமடைந்தனர். இதன் பிறகு, காஷ்மீரில் எண்ணற்ற தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு கொத்து கொத்தாக பொதுமக்களும், இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் மடிந்தனர். மசூத் அசார் தலைமையிலான ஜெயிஷ் இ மொஹம்மத் அமைப்பினரால் இதுவரை 300-க்கும் அதிகமான தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டு உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன. 

 

பத்தான்கோட் பதற்றம்:
கடந்த 2016-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் பத்தான்கோட் இந்திய விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெறியாட்டத்தில் 7 பாதுகாப்பு படையினர் வீர மரணமடைந்த நிலையில் 25 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தான் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் கனல் பார்வை தகதகவென எரிய ஆரம்பித்தது. இத்தாக்குதலை நடத்தியது என்னவோ ’ஐக்கிய ஜிஹாத் கவுன்சில்’ அமைப்பினர் என்றாலும் ஜெய்ஷ் இ மொஹம்மத் இயக்கத்தினர் மீது இந்திய அரசின் சந்தேகம் வலுவாக இருந்தது. கிட்டத்தட்ட பத்தான்கோட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதே இந்த அமைப்பு தான் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து தகவல் கசிந்த வண்ணமிருக்க, பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. 

 

நிரந்தர தடை:
கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. அல் கொய்தாவைச் சேர்ந்த 19 தீவிரவாதிகள் தலைமையில் நடத்தப்பட்ட இந்த கோர தாக்குதலில் சிக்கி 2,996 பொதுமக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். தீவிரவாதம் மீதான உலகத்தின் அனல் பார்வையை ஒருசேர திருப்புவதற்கு காரணமாக அமைந்தது இந்த தாக்குதல் தான்.

இதையடுத்து, உலகளாவிய தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடத் தொடங்கியது. அப்போது, காஷ்மீரை தளமாக கொண்டு இயங்கும் ஜெயிஷ் இ மொஹம்மத் அமைப்பையும் தீவிரவாத தடை பட்டியலில் சேர்த்தது அமெரிக்க அரசு. மேலும், பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் நட்புறவில் விரிசல் ஏற்பட, இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்புறவில் புதிய அத்தியாயம் பிறந்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளும் ஜெய்ஷ்-இ-மொஹம்மத் அமைப்பை நிரந்தரமாக தடை செய்தன. 

 

பெயர் மாற்றம்:
இயக்கம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசின் ரகசிய உத்தரவின் பேரில் ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பானது அதன் பெயரை மாற்றிக்கொண்டது. ஆனால், என்னதான் பெயரை மாற்றினாலும் அதன் அடையாளத்தை மறைக்க முடியாமல் போனதால் காஷ்மீரைக் கடந்து வேறு எந்த நாட்டிலும் ஜெய்ஷ் இ மொஹம்மத்தால் காலூன்ற முடியவில்லை. எங்கு சென்றாலும் அரசப்படையின் தாக்குதல் மேலோங்கி இருந்ததால் காஷ்மீரிலேயே தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்திக்கொண்டது. 

கிறிஸ்தவர்களை நோக்கி குறி:
காஷ்மீர் பிரிவினை மற்றும் ஆஃப்கான் உள்நாட்டுப் போர் போன்ற 2 நோக்கங்களுக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்களை பாகிஸ்தானை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற 3-வது நோக்கத்தை கையில் எடுத்தது ஜெய்ஷ் இ மொஹம்மத். பாகிஸ்தானுக்குள் சுற்றித்திரியும் மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்களை கொல்லும் கொடூரத்தில் இறங்கியது அந்த அமைப்பு. குறிப்பாக, அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் கொல்லப்பட்டதும் இந்த நோக்கத்திற்காகத் தான். ’தீவிரவாதிகளை அழிக்க ஒரே ஆயுதம் தீவிரவாதம் தான்’ என்று பலரும் கூக்குரலிட்டு வரும் இந்த வேளையில், நிரந்தர தீர்வை நோக்கி தற்போது நகர்கின்றது இந்திய அரசு...

News Counter: 
100
Loading...

mayakumar