மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை தித்திப்பானதாகவே காணப்படுகிறது....

share on:
Classic

ஜெயலலிதா தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் முதல் லேடி சூப்பர்ஸ்டார் ஜெயலலிதா என்றால் அது மிகையல்ல... 

திரையில் ஆணாதிக்கத்தை உடைத்தவர்:
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழக அரசியலில், ஒரு பெண் திரை  நட்சத்திரம்,  நட்சத்திரமாகவே மின்னியது தமிழக அரசியலில் மட்டுமே சாத்தியமாயிற்று. திரையுலகில் மட்டும் அல்ல, முதன் முதலாய் தமிழக அரசியலில் தனக்கான கோட்டையை கட்டி, அதில் பேரசியாக அமர்ந்துகொண்டு, தனக்கான சாம்ராஜியத்தை மென்மேலும் விரிவுப்படுத்தியவர். இதுவரை தமிழகம் கண்ட அரசியல் சரித்திரத்தில், இவரைப்போல் யாரும் முடிசூடவில்லை. முடி சூட்டப்படவும் இல்லை. தமிழ் திரைப்பட உலகின் சரித்திரத்தை, இவரைத் தவிர்த்துவிட்டு, எந்த ஒரு பக்கத்தையும் முழுமையாக செதுக்கிவிட முடியாது. 

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியவர்:
திரைத்துறையில் ஸ்ரீசைல மகாத்மியம் படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் ஜெயலலிதா. முதன்முதலில் தமிழில் கதாநாயகியாக  நடித்த படம் வெண்ணிற ஆடை. முதல் படமே அவருக்கு மகுட்டம் சூட்டியது. காலம் கனிய கனிய எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், எஸ். எஸ். ராஜேந்திரன், என். டி. ராமராவ் என அவரது காலத்தில் புகழ்பெற்ற அத்தனை ஸ்டார்களுடனும் இணைந்து நடித்தார். ஆயிரத்தில் ஒருவன்,  பட்டிக்காடா பட்டணமா, அடிமைப்பெண் உள்ளிட்ட படங்கள் அவருக்கான தனித்துவத்தை, திரையில் தனித்தே காட்டின. 

ஜெயலலிதாவின் 100-வது படமாக திருமாங்கல்யம்  வெளியாகி அவருக்கான புகழை அதிகளவில் சேர்க்கத் தவறவில்லை. திரைத்துறையில், அவருக்கான காலமாக அது மாறிப்போனது. எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்த ஒரே நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றார். அதிகபட்சமாக எம்.ஜி.ஆருடன், 28 படங்களில் இணைந்து நடித்தார். எம்.ஜி.ஆரையும், சிவாஜியும் வெறித்தனமாக கொண்டாடிய அவரது ரசிகர்கள், ஜெயலலிதாவையும் அதே நேர்கோட்டில்தான் நேசிக்க ஆரம்பித்தார்கள். அந்த அன்புதான், அவரை, அரசியலுக்கு அடித்தளமிட செய்தது என்று சொன்னாலும், அது சாலப்பொருந்தும். 

ரசிகர்களை ரசிக்கும் ரசிகை:
'நதியைத்தேடி வந்த கடல்’ திரைப்படமே அவருக்கு கடைசி படமாக அமைந்தது. நடித்த அத்துனை படங்களிலும் தன்னுடைய பெயரை ஊர் சொல்ல வைத்தார். திரைத்துறையில் மட்டும் அல்லாமல் ’துக்ளக்’ உள்ளிட்ட சில தமிழ் பத்திரிகையிலும், சில ஆங்கில பத்திரிகையிலும், கதைகள், சினிமா அனுபங்கள்,தொடர்கள் என தனது எழுத்துக்களாலும் பிரகாசித்தார். திரைத்துறையில் இவர் நிகழ்த்திய சாதனைக்காக கடந்த 1972-ஆம் ஆண்டு தமிழக அரசின் ’கலைமாமணி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

தமிழக ரசிகர்களை மட்டுமல்ல, தமிழக மக்களையும் புரிந்துகொள்வது என்பது அவ்வளவு சாதரணமான விஷயம் இல்லை. ஒன்றுமே இல்லாதவர்களை திறமைக்காக ஒரே இரவில்  பிரகாசிக்கும் நட்சத்திரமாய் உயர்த்திப் பிடிப்பதும் தமிழக ரசிகர்கள் தான். ஒன்றுமே இல்லாமல் ஓவராய் அலட்டிக்கொண்டால் எவ்வளவு பெரிய நட்சத்திரமாய் ஜொலித்தாலும், ஒரே இரவில் கீழே இறக்கி விடுவதும் தமிழக ரசிகர்களின் பாணியாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட ரசிகர்களிடம், தனக்கான இடத்தை பிடித்து அவர்களது உள்ளங்களில் மட்டுமில்லாமல் அவர்களது இல்லங்களிலும் குடியிருப்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. அதையும் சாத்தியமாக்கி, தன் வாழ்க்கையில் தனி சரித்திரம் படைத்தார். இன்று அவர் இல்லையென்றாலும், அவரது சரித்திரத்தை தமிழ் திரையுலகம் என்றும் பேசிக்கொண்டுதான் இருக்கும்.

News Counter: 
100
Loading...

admin