"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்".......வற்றாத வரலாறு !

share on:
Classic

ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தாயார் வேதவள்ளி தனது பெயரை சந்தியா என மாற்றி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

ஜெயலலிதாவின் பிறப்பு:

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மேல்கோட்டையில் வழக்கறிஞர் ஜெயராம் - வேதவள்ளி தம்பதிக்கு  24 பிப்ரவரி 1948 -ம் ஆண்டு மகளாகப்  பிறந்தவர் கோமலவள்ளி.  பள்ளியில் சேர்ந்த போது, ஜெயலலிதா என்ற பெயரில் சேர்க்கப்பட்டார்.  

1964 ஆம் ஆண்டு கர்ணன் என்ற படத்தில் நடித்து வந்த சந்தியா, தனது மகளுடன் சென்றபோது, ஜெயலலிதாவை பார்த்த படத்தின் இயக்குநர் பி.ஆர். பந்தலு, அடுத்த படத்தில் ஜெயலலிதாவிற்கு வாய்ப்பு அளிப்பதாக கூறினார். 

இதனைத் தொடர்ந்து தனது முதல் படமாக சின்னடா கோம்பே  "Chinnada Gombe" என்ற கன்னடப் படத்தில் 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நடித்தார் ஜெயலலிதா. 

அப்போது பி.யு.சி படித்து வந்த ஜெயலலிதா, தனது பள்ளி கோடை விடுமுறையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 

1958 ஆம் ஆண்டு வரை பெங்களூரு Bishop Cotton பள்ளியில் படித்த ஜெயலலிதா அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். 

படிப்பில் எப்போதும் முதல் மாணவியாக வலம் வந்த ஜெயலலிதா 10 -ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். 

இதனைத் தொடர்ந்து ஸ்டெல்லா மேரிஸ்  கல்லூரியில் சேர்ந்த அவர், தொடர் படப்பிடிப்பு காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். 

இதனிடையே ஜெயலலிதா தனது மூதாதையர்களின் ஊரான ஸ்ரீ ரங்கம் கிழக்கு சித்திரை வீதியில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்தார். தொடர்ந்து அதே தெருவில் மற்றொரு வீட்டில் ஜெயலலிதா குடும்பத்தினர் சிறிது காலம் வசித்தனர்.  பின்னர் அவர்களது குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது.

ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை

ஜெயலலிதா தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஜெயலலிதா என்றால் அது மிகையாது. 

எம்.ஜி.ஆருடன் மட்டும்  28 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. இருவரும் சேர்ந்து நடித்த காட்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. 

 சிவாஜி, எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன்,  என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜெயலலிதா நாயகியாக நடித்துள்ளார்.


தமிழில் கதாநாயகியாக அவர் முதன்முதலில் நடித்த படம் வெண்ணிற ஆடை. இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. 

ஆனால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால், 18 வயது நிரம்பாத ஜெயலலிதா தனது முதல் திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியவில்லை. 

இவர் கடைசியாக நடித்த படம் 1980-ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்". இந்த படத்துடன் 16 வருட சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார் ஜெயலலிதா.

இரும்புப் பெண்மணியின் துணிச்சலான செயல்பாடுகள் ஒரு பார்வை: 

1970 ஆம் ஆண்டு பெங்களூருவில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒப்புக் கொண்ட ஜெயலலிதா பிறகு அதனை ரத்து செய்ததற்கு கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் கண்டனம் தெரிவித்தார். 

தான் கன்னடர் அல்ல தமிழர் என ஜெயலலிதா அளித்த பதிலால் ஆத்திரமடைந்த வாட்டாள் நாகராஜ் ஜெயலலிதா இனி கர்நாடகாவிற்குள் கால் வைக்க முடியாது என எச்சரித்தார். 

ஆனால் தேவைப்பட்டால் கர்நாடகாவிற்குள் நிச்சயம் வருவேன் என பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா. 

அடுத்த ஆண்டே கர்நாடகா செல்ல வேண்டிய அவசியம் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டது. 1971 - ம் ஆண்டு கங்கா கவுரி திரைப்படத்திற்காக பெங்களூரு சென்ற ஜெயலலிதாவை வட்டாள் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். 

தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழகம் ஒழிக என்றும் கன்னடம் வாழ்க என்றும் முழக்கம் எழுப்ப வலியுறுத்தினர். இதற்கு அஞ்சாத ஜெயலலிதா கன்னடம் வாழ்க என்று கூறுவதில் தனக்கு தயக்கம் இல்லை என்றும் தமிழகம் ஒழிக என்று தன்னால் கூற முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். காவல்துறை சம்பவம் இடம் வந்து படக்குழுவினருக்கு பாதுகாப்பு அளித்தது. 

தனது கோபத்தை வெளிப்படையாக காட்டும் ஜெயலலிதா, தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தொகுப்பாளரிடம் சீறிய காட்சிகள் அதிமுக தொண்டர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. 

அரசியலில் கடந்து வந்த பாதை: 

தமிழகம் தனக்கான தனித்தன்மையுடன் எப்போதும் திகழ்கிறது. அதனால் தான் தேசிய கட்சிகளால் இங்கே கால் ஊன்ற முடியவில்லை. தேசிய அரசியல் மீதான ஒரு வித வெறுப்புணர்வுதான், இங்கே தனித் தமிழ்நாடு கேட்டு, இடி முழங்க. முழக்கங்கள் எழுப்ப வைத்தது. இதுபோன்ற தனித்துவத்தை சரியாக புரிந்துகொண்டு கையாண்டவர்களில் மிக முக்கியமானவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. தனி ஒரு மனுஷியாக இருந்தாலும், இரும்பு பெண்மணியாக அறியப்பட்டார். 

அரசியலுக்கு அவர் நுழைய முக்கிய காரணமாக இருந்தது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் தான். அப்போது, தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்.,  1981ஆம் ஆண்டு, ஜெயலலிதாவை அதிமுகவில் சேர்த்தது மட்டும் இல்லாமல், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி கௌரவித்தார். எம்.ஜி.ஆர்., விசுவாசத்தை பெற்றதால், 1984-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

அவருக்கு, அண்ணா அமர்ந்திருந்த 185-வது இருக்கை அளிக்கப்பட்டது. சினிமாவை போலவே, அரசியலிலும் கொடிக்கட்டி பறந்தார். அடுத்தடுத்து அவருக்கு ஏறுமுகவே இருந்தது. 1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 -ம் ஆண்டு அண்ணா தி.மு.க. இரண்டாக பிளவுபட்ட போது, தென் தமிழகத்தின் போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்டு முதன் முதலாக வென்றார். 

1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின் ஜானகி முதல்வரானார்.  24 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. அதிமுக ஜானகி, ஜெயலலிதா என இரு அணிகளாகப் பிரிந்து. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, 2 ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டில் அதிமுக பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலிலதா. அதே ஆண்டில் சட்டசபைத் தேர்தல் வந்தது.

இதில் ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றிபெற்றது. ஜானகி அணி ஒரே இடத்தைப் பெற்று படுதோல்வியைத் தழுவியது. இதனால், முதன்முறையாக தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தார் ஜெயலலிதா.1989 பிப்ரவரியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு பிரிவுகளும் இவருடைய தலைமையின் கீழ் இணைந்தது. இதனால், ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தமிழக சரித்திரத்தில், அவர் பெயர் பொண் எழுத்துக்களால் செதுக்கப்பட்ட நேரம் அது. 

ஜெயலலிதா என்னும் தனி ஆளுமையின் கீழ், கடந்த 1991-ல்  போட்டியிட்ட அ.தி.மு.க அணி,  168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 இடங்களில் அமோக வெற்றிப் பெற்றது. ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராக முடிசூடினார். தொடர்ந்து, 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், படுதோல்வி அடைந்தார். 2001ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். ஜெயலலிதாவின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் முதல்வராக பதவியேற்று சில மாதங்களில் அப்பதவியை ராஜினாமா செய்து, 2002-ம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. தொடர்ந்து நடைபெற்ற 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவினார். மேலும், 2011-ம் ஆண்டு 150 தொகுதிகளில் வென்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். 2014 ஆம் ஆண்டு மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஜெயலலிதா, பின்னர் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார். 

 

அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர்.,  தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சராக பதிவி ஏற்று சில ஆண்டுகளிலேயே உயிர் நீத்தார். தன் அரசியல் ஆசானைப்போலவே, ஜெயலலிதாவும் தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று,  உலக வெளியிலிருந்து 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு விடைப்பெற்றுக்கொண்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது அரசியல் வாழ்க்கையில் எந்த அளவுக்கு சாதனைகள் இருந்ததோ, அந்த அளவுக்கு அவருக்கு சோதனைகள் இருந்தும் மறுப்பதற்கு இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒட்டுமொத்த தமிழக மக்களையும், தன்னை அம்மா என்று அழைக்க வைத்து, சரித்திரத்தில் தனக்கான தடம் பதித்து சென்றிருக்கிறார் ஜெயலலிதா.  தமிழக அரசியலில் மட்டும் அல்ல, இந்திய அரசியல் வரலாற்றில்கூட, இவர் பெயரை தவிர்த்து விட்டு வரலாற்றை எழுதுவது சாத்தியமற்றது. சாதனைக்குறிய இரும்பு பெண்மணியாக இன்றும் கொடிகட்டிப் பறக்கிறார் ஜெயலலிதா.. இன்னொரு பெண், இவரைப்போல பிறக்க.. இன்னும் எத்தனை யுகங்கள் ஆகுமோ? 

இறப்பு:  

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவர் உயிரிழந்தது வரை பல்வேறு சர்ச்சைகளும், சந்தேகங்களும் தொடர்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், உயிரிழந்தது வரையிலான ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 10:15 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், நீர்சத்து குறைபாடு மற்றும் அஜீரண கோளாறு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படடது. தொடர் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், நலமாக இருப்பதாகவும் அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்தது.  இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30- ஆம் தேதி, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே அப்பல்லோ மருத்துவமனை வந்து ஜெயலலிதாவிற்கு நுரையீரல்  தொடர்பான சிகிச்சை அளித்தார். 

ஜெயலலிதாவை சசிகலா மற்றும் மருத்துவர்கள் தவிர, வேறு யாரும் நேரில் பார்க்காததால், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அக்டோபர் 1-ஆம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ், அப்பல்லோ சென்று ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு என்று மட்டுமே சொல்லி வந்த அப்பல்லோ அக்டோபர் 3 ம் தேதி முதன் முறையாக முதல்வருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டிருப்பதாக கூறியது.  தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அக்டோபர் 5 ஆம் தேதி சென்னை வந்து, ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியது. இதனிடையே ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகளை வெளியிட்டனர். 

முதலமைச்சர் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாகவும், செவிலியர்களை கிண்டல் செய்ததாகவும், அதிமுகவினர் ஊடகங்களிடையே  தெரிவித்தனர். தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி ஜெயலலிதாவிற்கு பிஸியோதரபி பயிற்சி அளிக்க சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு அப்பல்லோ வந்தது. அக்டோபர் 21 ம் தேதிக்குப் பிறகு அப்பல்லோவில் இருந்து எந்த அறிக்கையும் வெளிவரவில்லை.

நவம்பர் 4 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதா பூரணமாக குணமடைந்து விட்டதாகவும், எப்போது வீட்டிற்கு செல்லலாம் என்பதை அவரே முடிவு செய்யலாம் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து நவம்பர் 29 -ம் தேதி நடைபெற்ற 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க ஜெயலலிதா கைரேகை கொண்ட மனு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய கவலையை அதிகரித்தது. 

தனது 11-வது அறிக்கையை நவம்பர் 21-ம் தேதி வெளியிட்ட அப்பல்லோ, ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி, அவர் மருத்துவர்களுடன் பேசி வருவதாக தெரிவித்தது. 

தனது 12-வது அறிக்கையை டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிட்ட அப்பல்லோ ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.  இதனிடையே டிசம்பர் 5 ஆம் தேதி மாலை ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவை காண கடும் போலீஸ் தடுப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு ஆவேசமாக உள்ளே நுழைய முற்பட்டனர்.

அதே நேரம் ஜெயலலிதாவிற்கு சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெறுவதாக அப்பல்லோ கூறியதால், புதிய திருப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இதனைத்தொடர்ந்து இரவு 11:30 மணியளவில் தனது 68வது வயதில் ஜெயலலிதா காலமானார். இதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் சாலை பகுதியே மரண ஓலத்தால் ஸ்தம்பித்தது. ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, வெங்கைய நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், டிசம்பர் 6 -ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. 

ஜெயலலிதா உடலுக்கு சசிகலாவும், ஜெ.தீபக்கும் இறுதி மரியாதை செய்த நிலையில் ஜெயலலிதாவின் முகத்தில் இருந்த 4 துளைகள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பின. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த மக்கள் மெரினாவிற்கு படையெடுத்தனர். இப்போதுவரை அந்த படையெடுப்பு தொடர்கிறது.

 

News Counter: 
200
Loading...

admin