திரையுலகில் செஞ்சூரி அடித்த ஜெயலலிதா

share on:
Classic

இந்தியா கண்ட இரும்பு பெண்மணிகளின் வரிசையில் என்றும் நீக்க முடியாத இடம் பிடித்த ஜெயலலிதா, தமிழ் சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த நாயகியாக ஜொலித்தார். அன்றைய அவரது திரையுலக வாழ்க்கையை விவரிக்கும் செய்தித்தொகுப்பை தற்போது திரையில் காணலாம்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது ஆளுமையை கண்டு அனைத்து தரப்பினரும் பிரம்மித்ததை போல், அவர் திரையிலகில் இருந்தபோது அவரது நடிப்புத்திறமையை கண்டு பிரம்மிக்காதவர்கள் இல்லை. அந்த திறமையால் அவரது கல்லூரி காலத்திலேயே திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன.

1961ம் ஆண்டு ராஜ்குமார் இயக்கத்தில் சிறிசைல மகாத்மி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த ஜெயலலிதா, அதே ஆண்டில் எபிஸில் என்ற ஆங்கிலப்படத்திலும் நடித்தார். 1964ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கிய கன்னட படமான சின்னத கொம்பேவில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜெயலலிதா. இதையடுத்து மனசுலு மமதலு என்ற தெலுங்கு படத்தில் ஜெயலலிதா நடித்தார்.

இவரது நடிப்புத்திறமையை கண்ட இயக்குனர் ஸ்ரீதர் தமிழில் வெண்ணிற ஆடை என்ற படத்தில் ஜெயலலிதாவை அறிமுகம் செய்தார். பிற்போக்கு கருத்துக்கள் மிகைத்திருந்த அந்த காலத்திலேயே ஜெயலலிதா தனது முதல் தமிழ் படத்தில் விதவை கதாப்பாத்திரத்தில் நடித்தார். அந்த திரை வெற்றியை தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படித்தில் ஜெயலலிதா நடித்தன் மூலம் அவரது புகழ் பட்டித்தொட்டியெங்கும் பரவியது.

இதன் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோருடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார் ஜெயலலிதா. அழகு, அறிவு, நடனம், குரல் வளம், மொழித்திறன் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருந்த ஜெயலலிதா தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக மாறினார். தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளை தொடர்ந்து இஜ்ஜத் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரையிலகில் நுழைந்தார் ஜெயலலிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 127 திரைப்படங்களை நடித்த ஜெயலலிதாவுக்கு இன்று அம்மா, புரட்சித்தலைவி என்ற பட்டங்கள் இருந்தாலும் அன்று அவர் கலைச்செல்வி என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டார். நடிப்பில் கலைச்செல்வியாக திகழ்ந்த ஜெயலலிதாவை அடிமைப்பெண் படத்தில் பாட வைத்து அழகுபார்த்தார் எம்.ஜி.ஆர். அந்த பாடலும் சூப்பர் ஹிட்டானது.

சந்திரோதயம், யார் நீ, நான், முத்துச்சிப்பி, கண்ணன் என் காதலன், அடிமைப்பெண் படங்களின் நடித்ததற்காக சிறந்த நடிகைக்‍கான விருதுகளை வாங்கிக்குவித்த ஜெயலலிதா, சிவாஜிகணேசனுடன் நடித்த எங்கிருந்தோ வந்தாள் படத்திற்கு மட்டும், சிறந்த நடிகைக்‍கான 3 விருதுகளை பெற்று அசத்தினார். ஜெயலலிதா தனது 100வது திரைப்படமான திருமாங்கல்யத்தில் நடித்ததற்காக கருணாநிதியின் கைகளால் விருது பெற்றார். நடிப்புக்கு இலக்கியமாக ஜெயலலிதா திகழ்வதாக கருணாநிதியிடமே பாராட்டை பெற்றார் அவர்.

ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் நடித்த 28 படங்களில் 19 படங்கள் பவள விழாவும், 8 படங்கள் பொன் விழாவும் கண்டன. சிவாஜி கணேசனுடன் அவர் நடித்த 15 படங்கள் பொன் விழா கண்டன. திரையுலகில் கணக்கிட முடியாத சாதனைகளை படைத்த ஜெயலலிதா நதியை தேடி வந்த கடல் படத்துடன் தனது திரையிலக பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

திரைப்படத்திற்கு திரைப்படம் வித்தியாசமான நடிப்பு, தோற்றம் என அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் கச்சிதமாக பொருந்தக்கூடிய ஜெயலலிதாவை மக்கள் தங்கள் வீட்டில் ஒருவராகவே கருதினர். ஜெயலலிதா திரையுலகை விட்டு விலகி அரசியலில் அசுர வளர்ச்சியை அடைந்தாலும் அவரது கலைப்பணி காலம் காலமாக போற்றிப்புகழப்படும்.

News Counter: 
100
Loading...

aravind