கோட்சே குறித்து கமல் தெரிவித்த கருத்துக்கு தொடரும் எதிர்ப்பு..!

share on:
Classic

இந்தியா முழுவதும் கடந்த 4 நாட்களாக விவாதமாகியுள்ள கமல்ஹாசனின் கருத்துக்கு, பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். இதனிடையே, கமல்ஹாசனின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்துக் கொண்டே உள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் கமல்ஹாசன் மீது புகார் அளித்து வருகின்றனர். அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடியும் கருத்து தெரிவித்துள்ளார்.

தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, எந்த ஒரு இந்துவும் ஒருபோதும் தீவிரவாதியாக இருக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை தீவிரவாதியாக இருக்கும்பட்சத்தில் அவர் இந்துவாக இருக்க வாய்ப்பில்லை எனவும் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் கருத்து மிகச் சரியானது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஐ.எஸ். அமைப்பிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு இந்துக்களுக்கு எதிராக கமல்ஹாசன் செயல்படுவதாக மன்னார்குடி ஜூயர் தெரிவித்துள்ளார். இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டால் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய அவர்கள், கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரித்தனர்.

ஆர்ப்பாட்டங்கள் ஒருபுறம் இருக்க கமல்ஹாசனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நடவடிக்கைகளும் ஆங்காங்கே நடைபெற்றன. கமல்ஹாசனின் பேச்சு இந்துக்கள் மத்தியில் பெறும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் இந்து முன்னணி அமைப்பினர் புகார் அளித்தனர்.

அதேசமயம், கமல்ஹாசனின் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ஆதரவும் எழாமல் இல்லை. காந்தியை கொலை செய்த கோட்சே-வுக்கு பாஜக, அதிமுக ஆதரவு தெரிவிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கமலை விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், பாஜகவுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே, கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan