கமல்ஹாசனுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளது : ஜீயரின் கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்..

share on:
Classic

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாக மன்னார்குடி ஜீயர் தெரிவித்த கருத்துக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் ஒரு கருத்தை பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும் என விமர்சித்தார். 

இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. கமல்ஹாசனின் கருத்து, தமிழக அரசியல் களம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, ஒருவர் இந்துவாக இருந்தால் அவர் நிச்சயம் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும் அப்படி ஒரு தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது எனவும் கூறினார். 

பல்வேறு தரப்பினர் கமல்ஹாசன் மீது காவல்நிலையங்களில் வழக்குகளையும் பதிவு செய்தனர். இந்த சூழலில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிம் பேசிய மன்னார்குடி ஜீயர், கமல்ஹாசன், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு, இந்து மதத்திற்கு எதிராக பேசி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து பேசிய பா.ஜ.க.வின் கரு.நாகராஜன், ஜீயர் பேசிய கருத்துக்கு அவர் விளக்கமளிக்கவேண்டும் என கூறினார். யார் பேசினாலும் தவறு தவறு தான் என்று கூறிய அவர், தீவிரவாதத்தை யாரும் கையில் எடுக்க கூடாது எனவும் வலியுறுத்தினார். 

மன்னார்குடி ஜீயரின் கருத்து குறித்து விமர்சித்த அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன், கமல்ஹாசனுக்கு ஐ.எஸ். அமைப்பிடம் தொடர்பு இருப்பதாக ஜீயர் தெரிவிப்பதும், நாதுராம் கோட்சே குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றம் சொன்னதாகக் கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், கடும் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.

கமல் பேசிய கருத்து குற்றமாகாது என்றும் அதேவேளையில், ஜீயர் பேசியது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வகையிலான குற்றம் என்றும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்றும், ஜீயர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya