காஷ்மீர் மிகவும் சிக்கலான இடம் : மீண்டும் மத்தியஸ்தம் செய்ய விரும்பும் ட்ரம்ப்..

share on:
Classic

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் பதற்ற நிலையை தணிக்க மத்தியஸ்தம் செய்ய மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன் தினம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது காஷ்மீரில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். பிராந்திய பிரச்சனைகளை பொறுத்தவரை, இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசுவதாகவும், அது அமைதிக்கு உகந்ததல்ல என்று ட்ரம்பிடம் மோடி தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் மென்மையான போக்கை கையாளுமாறும் இம்ரான் கானுக்கு அறிவுறுத்தியத்தினார் ட்ரம்ப்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ர்ம்ப் “ காஷ்மீர் என்பது மிகவும் சிக்கலான இடம். உங்களிடம் இந்துக்கள் உள்ளனர், உங்களிடம் முஸ்லீம்கள் உள்ளனர், ஆனால் அவர்கள் மிகச்சிறந்தவர்கள் என்று நான் கூற மாட்டேன். நான் மத்தியஸ்தம் செய்தால், என்னால் முடிந்த வரை சிறப்பாக செய்வேன். இரண்டு நாடுகளும் நீண்ட நாட்களாக வெளிப்படையாக செயல்படாததால் தற்போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த மாதம் அரசப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றார். ட்ரம்ப், இம்ரான் கான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது இரு நாடுகளும் விரும்பினால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் ஜப்பானில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் மோடியை சந்தித்த போது காஷ்மீர் பிரச்சனையை தீர்த்து வைக்க தன்னிடம் உதவி கோரியதாகவும் ட்ரம்ப் கோரினார். ஆனால் ட்ரம்பின் இந்த கருத்தை மறுத்த மத்திய வெளியுறவு அமைச்சகம், அதுபோன்ற ஒரு கோரிக்கையை மோடி வைக்கவில்லை எனவும், காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என்றும் தெரிவித்தது. தற்போது  காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால், காஷ்மீரில் உச்சக்கட்ட பதற்றம் நீடித்து வரும் நிலையில், மீண்டும் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 

News Counter: 
100
Loading...

Ramya