கௌசல்யா மறுமணம்... வார்த்தைப் போர் நடத்தும் நெட்டிசன்கள்

share on:
Classic

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கௌசல்யா மறுமணம் செய்துகொண்டிருப்பது இப்போது மிகப்பெரிய பேசு பொருளாக உருவெடுத்துள்ளது. 

கௌசல்யாவின் கடந்த வாழ்க்கை:
மறுமணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வே. ஆனால், அதற்குள் அரசியல், சாதி என பலவற்றை கலந்து பெரும் பேசு பொருளாக மாற்றியுள்ளனர் நெட்டிசன்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் மாணவரான சங்கரை 2015-ம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார் கெளசல்யா. 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் சங்கர், தன்னுடைய காதல் மனைவி கண் முன்னே ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். அதன்பின், சங்கர் கொலைக்கு காரணமான தன் பெற்றோர்கள் உட்பட 11 பேருக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி அலமேலு நடராஜன், கெளசல்யாவின் தந்தை உட்பட கொலையில் சம்மந்தப்பட்ட 6 பேருக்கு மரண தண்டனையும், தாய் உட்பட 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார். சங்கரின் மரணத்திற்குப் பிறகு பல்வேறு சமூக அவலங்களுக்கு குரல் கொடுத்து வந்த கெளசல்யா 'பறை' இசையை கற்றதோடு அதை பலருக்கும் பயிற்றுவித்து வந்தார். 

கருத்துக்களத்தில் நெட்டிசன்கள்:
இந்நிலையில், பறை இசை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கோவையைச் சேர்ந்த சக்தி என்பவரை நேற்று மறுமணம் செய்து கொண்டார் கெளசல்யா. கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி ஏற்று சக்தி - கெளசல்யா இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். அவர்கள் இருவரின் புகைப்படமும் மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவரின் இந்த முடிவை ஆதரித்து பலரும் அவருக்கு வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் இந்த மறுமணத்தை எதிர்த்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் நெட்டிசன்களிடையே கடும் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. 

சமூகத்தின் சிந்தனைகள்:
உண்மையில் மறுமணம் தவறா?... அதுவும் 'லிவின் டூ கெதர்' அதிகரித்து வரும் இன்றைய சூழலில் இதுபோன்ற விவாதங்கள் எதை நமக்கு உணர்த்துகின்றன. 1990-களில் 2 குடும்ப நல நீதிமன்றங்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்தன. விவாகரத்து பெறவே பெரும்பாலும் இந்த நீதிமன்றங்களையே அனுகுவார்கள். தற்போது அதன் எண்ணிக்கை 40-ஐ தொட்டுள்ளது. காதல் திருமணமோ, பெற்றோர் விருப்ப திருமணமோ ஆசையாய் தொடங்கிய வாழ்க்கையை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்கவில்லை என்று கூறி விவாகரத்து பெற்று பின் பிரிந்து செல்கின்றனர். அப்படி செல்லும் பலரும் மறுமணம் செய்து கொள்கின்றனர். அது அவர்கள் விருப்பம். அதற்காக அவர்களின் முந்தைய வாழ்க்கையை பொய் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

உன் வாழ்க்கை உன் கையில்:
பல துயரங்களுக்குப் பிறகே விவாகரத்து முடிவை எடுக்கின்றனர். அதன் பின் அவர்கள் வாழ்க்கை அவர்களது விரும்பம். அடுத்து ஏதோ எதிர்பாராத விதமாக கணவனோ மனைவியோ இறக்க நேரிட்டால் வாழ்க்கை முழுவதும் அவர்கள் நினைவாக வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது அவரவர் சொந்த விருப்பம். ஒரு சிலர் குழந்தைகளுக்காக மறுமணத்தை ஏற்க மாட்டார்கள். ஆனால், திருமணம் ஆன சில மாதங்களிலேயே 21 வயதான ஒரு பெண் தன் கணவரை 'சாதி' என்னும் அரிவாளுக்கு பலி கொடுத்திருக்கிறாள். வாழ்நாள் முழுவதும் அவள் தனிமையில் வாழ்ந்து உங்களிடமிருந்து எதை பெறப்போகிறாள். அவள் வாழ்க்கையை மீண்டும் அவள் விருப்பம் போல சங்கரின் பெற்றோர் ஆசியுடன் அமைத்துக்கொள்கிறாள். அவள் செய்தது சரியோ தவரோ அது அவள் வாழ்க்கை. அவளுக்கு நீங்கள் கொடுக்கும் அவப்பெயர் உங்கள் மனதின் வெளிப்பாடு மட்டுமே. 
 

News Counter: 
100
Loading...

mayakumar