தண்ணீர் லாரி மோதி 8-ஆம் வகுப்பு மாணவி பலி..

Classic

சென்னையில், பள்ளிக்கு சென்ற 8-ஆம் வகுப்பு மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கீழ்ப்பாக்கம் புதிய ஆவடி சாலையில் உள்ள மணிமண்டபம் முதலாவது தெருவில் வசித்து வரும் லிஜூ - ஜீனா தம்பதிக்கு 8-ஆம் வகுப்பு படிக்கும் ஜெமிமா என்ற மகள் இருந்தாள். காலையில் பள்ளி வாகனத்தை தவர விட்டதால் அவளது மாமாவுடன் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றாள். 

அப்போது பின்புறமாக வந்த தண்ணீர் லாரி அவர்களது பைக்கில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெமிமா மீது, பின்பக்கமாக வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில், சம்பவ இடத்திலேயே ஜெமிமா பரிதாபமாக உயிரிழந்தாள். 

பின்னர், சுற்றியிருந்த பொதுமக்கள் ஒடி வந்து லாரி ஓட்டுநர் கோவிந்தராஜனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் போலீசார் ஜெமீமாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தண்ணீர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
சாலைகளில் கடைகள் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தை அப்படியே விட்டுச் செல்வதே விபத்திற்கான காரணங்களில் ஒன்று என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

தண்ணீர் நிரப்புவதற்காக இங்கு லாரிகள் அதிகமாக வருவதால் இந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.  இங்கு இதுவரை நடந்துள்ள அனைத்து விபத்துக்களிலும் பெரும்பாலானவை தண்ணீர் லாரிகளால் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே இந்த இடத்தில் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும், இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் காவல்துறை சார்பில் எடுக்கப்படவில்லை என்றும் இந்த பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

News Counter: 
100
Loading...

mayakumar