கமல்ஹாசனை வெளியில் நடமாட விடமாட்டோம் : ஜீயரின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்..

share on:
Classic

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் என தெரிவித்திருந்த மன்னார்குடி ஜீயர், கமல்ஹாசனை தேச துரோகி என விமர்சித்துள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கோட்சேவை தீவிரவாதி என்று கூறிய கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மன்னார்குடி ஜீயர், கோட்சே ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்று கூறினார். இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் கமல் பேசியிருப்பதாவும் அவர் கூறினார். கமலுக்கு எதிராக கருத்து தெரிவித்த மன்னார்குடி ஜீயரின் பேச்சு மத வெறியை தூண்டும் வகையில் இருப்பதாக கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஜியரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கோட்சே குறித்து கமல் பேசியதற்கு எழும் எதிர்வினைகள், தமிழகம் எந்த திசையை நோக்கி செல்கிறது என்ற கேள்வியை எழுப்புவதாக கூறினார். மன்னார்குடி ஜீயர் தீவிரவாதிபோல் பேசி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சாடியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கமலின் கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டும் என்றும், அதனைவிடுத்து மிரட்டல் விடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதும் என்றும் கூறினார். ஒரு ஜீயர் தீவிரவாதி போல பேசுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றவர்களுக்கு சிலை வைப்பவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் பாஜக ஓட்டு வங்கிக்காக இந்து மக்களை ஏமாற்றி பித்தலாட்டம் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கமலின் கருத்துக்கு இந்து அமைப்புகளிடமிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கருத்து கமல்ஹாசனுக்கு ஆதரவாகவே உள்ளது.
 

News Counter: 
100
Loading...

Ramya