நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி

share on:
Classic

நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவித்துள்ளது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டுமே குழுவில் உள்ளதாக கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் போதிய கருத்தொற்றுமை இல்லை என்றால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் விழாக்குழுவை நீதிமன்றமே அமைக்கும் என்றும் கூறியிருந்தது. பின்னர், பிற்பகல் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மதுரை ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் நியமிக்கும் ஆணையாளர்கள் குழு, ஜல்லிக்கட்டு ஆலோசனை குழு உறுப்பினர்களை நியமிக்கும் என்றும், இக்குழுவே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் ஜல்லிகட்டு நடத்த போதிய பாதுகாப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்த விரிவான அறிக்கை மாலை பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

sasikanth