மலேசிய விமானம் மாயமாகி 5 ஆண்டுகள் நிறைவு... 239 பேரின் கதி...?

share on:
Classic

239 பேருடன் பயணித்த மலேசிய MH370 விமானம் மாயமாகி இன்றுடன் ஐந்தாண்டு நிறைவடைந்துள்ளது. 

விமானம் மாயம்:
கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதியன்று, மலேசியாவைச் சேர்ந்த MH370 விமானம் 227 பயணிகள், 12 பணியாட்கள் உட்பட 239 பேருடன் நடு வானில் மாயமானது. உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் விமான போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு மீது பெரும் விமர்சனங்களை முன்வைக்கக் காரணமாகத் திகழ்ந்தது. நீண்ட நாட்கள் தொடர்ந்த தேடுதல் பணியையடுத்து விமானம் விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என்றும், இதில் பயணம் செய்த 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் மலேசிய அரசால் அறிவிக்கப்பட்டது. 

விமானத்தில் பயணம் செய்தோர் விவரம்:
சீனர்கள் 153, மலேசியர்கள் 50, இந்தோனேசியர்கள் 7, ஆஸ்திரேலியர்கள் 6, இந்தியர்கள் 5, ஃபிரான்ஸ் நாட்டவர்கள் 4, அமெரிக்கர்கள் 3, கனேடியர்கள் 2, நியூசிலாந்து நாட்டவர்கள் 2, உக்ரைனியர்கள் 2, ஈரானியர்கள் 2, நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் 1, ரஷ்யர்கள் 1 மற்றும் தைவான் நாட்டவர்கள் 1...

சன்மானம் அறிவிப்பு:
தொடர் தேடுதல் பணிக்கு உரிய பலன் கிடைக்காததால் மலேசிய விமானத்தை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு, அரசு தரப்பினர் மட்டுமின்றி மற்ற நாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களும் தேடுதல் பணியில் ஈடுபடலாம் என்றும், வெற்றிகரமாக விமானத்தை கண்டுபிடித்து விட்டால் சன்மானம் அளிக்கப்படும் எனவும் மலேசிய அரசு அறிவித்தது. 

தேடுதல் முயற்சி தோல்வி:
கைவிடப்பட்ட தொடர் தேடுதல் பணியானது 4 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டு மீண்டும் தொடங்கியது. ’ஓஷன் இன்ஃபினிட்டி’ என்ற தனியார் நிறுவனம் மூலமாக இந்த தேடுதல் பணி தொடரும் என மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்தது. இந்திய பெருங்கடல் பகுதியில் 90 நாட்கள் வரை நீடித்த தேடுதல் பணிக்கும் பலன் கிடைக்காததால் விமானம் என்ன ஆனதென்பது இறுதிவரை புரியாத புதிராகவே உள்ளது. விபத்து நடந்ததா? இல்லையா? என்பதை கூட தெரிந்துகொள்ள முடியாமல் இன்று வரை தத்தளித்து வருகின்றது நவீன உலகம். 

ஆவணப்படம் வெளியீடு:
எஞ்சின் செயலிழப்பு காரணமாக விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற கூற்று, புதிய ஆவணப்படத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. இணையத்தில் கடந்தாண்டு வெளியான இந்த ஆவணப்படத்தில் விமானம் எப்படி விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என்பது நம்பக்கூடிய வகையில்  தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இதுவும் வெறும் அனுமானமாக மட்டுமே அமைந்தது.

கண்ணீர் கடலில் உறவினர்கள்:
மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் இன்றுவரை தங்களது குமுறல்களையும், இகழ்ச்சிகளையும் கண்ணீர் வழியாகவே வெளியேற்றி வருகின்றனர். ஆனால், விமானத்திற்கும் அதற்குள் இருந்த பயணிகளுக்கும் என்ன ஆனது என்பது மட்டும் இதுவரை அவிழாத மர்ம முடிச்சாகவே தொடர்கின்றது. விமானம் மாயமாகி 5 ஆண்டுகள் கடந்தும் கூட இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது ‘தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதகுலம் எட்ட வேண்டிய உயரம் இன்னும் அதிகம் உள்ளது’ என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.  

News Counter: 
100
Loading...

mayakumar