பயமா? எனக்கா?... பிரதமர் மோடி வேற லெவல் பெர்ஃபாமன்ஸ் : Man vs Wild மோடி ஸ்பெஷல்

share on:
Classic

டிஸ்கவரி டிவி சேனலில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதிலிருந்து நெட்டிசன்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. 

'டிஸ்கரி' சேனல் என்றதும் நமது நினைவுக்கு வரும் முதலாவது ஷோ 'மேன் வெர்ஸஸ் வைல்டு'... 'பேர் கிரில்ஸ்' என்பவரின் சாகசத்தால் உருவாக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், காடுகளில் மனிதன் எவ்வாறு உயிர்பிழைத்திருப்பது என்பது பற்றியும், வன பாதுகாப்பு குறித்தும் விவரிக்கப்படுவது வழக்கம். 'சாகசங்களுடன் கூடிய சிந்தனை நிகழ்ச்சி' என்பதால் உலகளவில் மேன் வெர்சஸ் வைல்டு ஷோவுக்கு பெரும் வரவேற்பு உண்டு. இந்த ஷோவில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருப்பதாகவும், அந்த முழு நிகழ்ச்சியும் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பி, 180 நாடுகளைச் சேர்ந்த மக்கள் கண்டுகளிப்பார்கள் என்ற செய்தி வெளியானதும் இந்தியர்களின் ஒட்டுமொத்த கவனமும் டிஸ்கவரி சேனலை நோக்கி திரும்பியது. தடாலடி பில்டப்-களுக்கு மத்தியில் கடந்த 12-ஆம் தேதி, 'மேன் வெர்ஸஸ் வைல்டு மோடி ஸ்பெஷல்' எபிஸோட் ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இந்திய வனத்திற்குள் பேர் கிரில்ஸ் அடியெடுத்து வைத்ததும் ’வெல்கம் டூ இண்டியா...வெல்கம் டூ இண்டியா’ என புன்னகை ததும்பிய இன்முகத்துடன் மோடி வரவேற்கிறார். வனப்பகுதிக்குள் இருக்கும் ஆபத்துக்கள் குறித்து பேர் கிரில்ஸ் எடுத்துரைக்கத் தொடங்கியதும் மோடியின் முகத்தில் சற்று மாற்றம் ஏற்படுகிறது. தம்மை நம்பி காட்டிற்குள் வந்துள்ள மோடியை 'உயிருடன் இந்திய மக்களிடம் ஒப்படைப்பதே தமது முக்கிய கடமை மற்றும் பொறுப்பு' என கூறியவாரே பயணத்தை தொடங்குகிறார் கிரில்ஸ்...

காட்டிற்குள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் சென்றவுடன், மரக்குச்சியின் நுனியில் கத்தியைப் பொருத்தியவாறு புதிய ஆயுதமொன்றை மோடியிடம் கொடுக்கின்றார் கிரில்ஸ். அந்த ஆயுதத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சொல்லிக்கொடுத்தவாறே, ‘மலைப்பகுதிக்குள் வாழ்ந்த அனுபவம் உள்ளதா?’ என மோடியிடம் வினா எழுப்பப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் மோடி, தமது இளமைப்பருவத்தில் இமய மலையில் வாழ்ந்ததாகவும், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர் தாம் என்றும் கூறுகிறார். இதில் என்ன கொடுமையென்றால், 'ஹிந்தி' என்ற மொழியைப் பற்றி துளியும் தெரியாத கிரில்ஸிடம் மோடி முழுக்க முழுக்க ஹிந்தியிலேயே பேசிக்கொண்டிருப்பார். ஆனால் என்ன செய்வது, பிரதமர் கலந்துகொள்ளும் ஷோ என்பதால் புரியாமலேயே தலையாட்டிக்கொண்டு சமாளிக்கிறார் கிரில்ஸ். இந்த ஒரு காட்சியில் மட்டுமல்ல, கிட்டத்தட்ட பெரும்பாலான காட்சிகளில் பேர் கிரில்ஸின் சமாளிஃபிகேஷனை இந்த ஷோ முழுவதும் காண முடிந்தது. இது போதாதென்று, அவ்வப்போது ஹிந்தியில் காமெடி டயலாக்குகளை மோடி சொல்வதும், அது என்னவென்றே புரியாமல் கிரில்ஸ் சிரித்துக்கொள்வதும் நகைச்சுவையின் உச்சம்...

வனத்திற்குள் சென்ற பின்பும் கூட 'தூய்மை இந்தியா’ திட்டத்தை நமது பிரதமர் விடுவதாக இல்லை. 'இவ்வளவு பெரிய நாடான இந்தியாவை தூய்மையாக வைத்திருப்பதில் என்னென்ன சவால்கள் உள்ளன?' என்று கிரில்ஸ் கேட்க, அதற்கு மோடி வழக்கம்போல் ஹிந்தியில் பதிலளிக்கின்றார். அந்த பதிலில் மஹாத்மா காந்தியின் பெயரையும் இணைக்கிறார் மோடி. இதைத்தொடர்ந்து, 'இவ்வுலகிலேயே இயற்கைத்தாயின் கொடை தான் சிறந்தது' என கிரில்ஸ் மெல்சிலிர்க்க, மறுபுறம் மோடியும் தலையசைக்க இனிதே நிறைவுக்கு வந்தது 'மோடி ஸ்பெஷல் மேன் வெர்சஸ் வைல்டு' ஷோ...

வட மாநிலங்களில் மோடியை விரும்புவோரின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும் அதே நேரம், தென் மாநிலங்களில் ஹேட்டர்ஸ்களின் எண்ணிக்கையும் இருக்கத்தான் செய்கிறது. ஹேட்டர்ஸ்கள் இருப்பதை நிரூபிக்கும் விதமாக சமூக வலைதளம் முழுக்கவும், மோடியுடன் சேர்த்து பேர் கிரில்ஸையும் நெட்டிசன்கள் தொடர்ச்சியாக வறுத்தெடுத்து வருகின்றனர். 

எது எப்படியோ, பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கிலும், வன பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பிரதமர் மோடி இந்த ஸ்பெஷல் ஷோவில் பங்கேற்றிருந்ததை யாராலும் மறுக்க முடியாது. இதனிடையே, இந்த ஷோ பிரத்யேகமாக மோடிக்காகவே நடத்தப்பட்டதாக ஒரு கூற்று நிலவி வருகிறது. மோடிக்கு முன்பாக, 'டைட்டானிக்' பட நடிகை கேட் வின்ஸ்லட், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரும் பாடகருமான நிக் ஜோனஸ், சுவிட்சர்லாந்து டென்னிஸ் விளையாட்டு நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் உட்பட எண்ணற்ற பிரபலங்கள் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Photos courtesy : Discovery

News Counter: 
100
Loading...

mayakumar