நியூசிலாந்தில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு..40 பேர் பலி..?

share on:
Classic

நியூசிலாந்தில் மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிக்குள் ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. Masjid Al Noor மசூதிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், அதிநவீன துப்பாக்கி மூலம் அங்கிருந்தவர்களை நோக்கி சுட ஆரம்பித்துள்ளார். இதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து தெரியவராத நிலையில், மசூதியை சுற்றி வளைத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பு, வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அந்த மசூதியில் தொழுகையில் ஈடுபட்டதாகவும், ஆனால் அவர்கள் பத்திரமாக திரும்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோன்று, நியூசிலாந்தின் தெற்கு தீவு பகுதியில் லின்வுட் (Linwood) மசூதியிலும் அடையாளம் தெரியாத நபர்கள், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் உயிரிழப்புகள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் உள்ள அனைத்து மசூதிகளையும் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு மசூதிகளை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான சூழல் நிலவுவதால் யாரும் வெளியே வரவேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே, துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நியூசிலாந்து - வங்கதேச அணிகள் மோத இருந்த கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sajeev