அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி : எடியூரப்பா கருத்து..

share on:
Classic

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் - மஜத கூட்டணியில் இருந்த 16 எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை தொடர்ந்து, அங்கு பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கிய நீதிமன்றம் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது எனவும தெரிவித்தது. மேலும் சபாநாயகர் கேட்ட கால அவகாசம் வழங்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது எனவும் உத்தரவிட்டனர். 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான எடியூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்றும், கர்நாடகத்தின் சூழலை கருத்தில் கொண்ட இந்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் அரசிடம் போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாததால், அவர்களால் ஆட்சியை நிறைவு செய்ய முடியாது என்று கூறிய எடியூரப்பா, குமாரசாமி தனது உரிமையை இழந்துவிட்டதாகவும், அவர் நாளையே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த தீர்ப்பு அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும், தீர்ப்பை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

Ramya