அப்பல்லோ ஹாஸ்பிட்டலுக்கே டஃப் கொடுக்கும் மும்பை ஹோட்டல்..!

share on:
Classic

அப்பல்லோ ஹாஸ்பிட்டலுக்கே டஃப் கொடுக்கும் மும்பை ஹோட்டல்..!

 

சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகரும் விஷ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த, ராகுல் போஸ், படப்பிடிப்புக்காக சண்டிகர் சென்றிருந்த போது, அங்கு உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கினார். உடற்பயிற்சி முடிந்ததும் வாழைப்பழம் வேண்டும் என்று கேட்ட அவருக்கு, அந்த ஹோட்டல், நிர்வாகம் வாழைப்பழத்துடன் பில் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், இரண்டு பழங்களுக்கான விலை, 375 ரூபாய் எனவும், ஜி.எஸ்.டி வரி 67 ரூபாய் 50பைசா சேர்த்து ரூ.442.50 என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான ராகுல், தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவே பதிவு செய்து விவரமாக வெளியிட்டார். இது சர்ச்சையான நிலையில் ஹோட்டல் நிர்வாகத்திற்கு கலால் மற்றும் வரி விதிப்பு துறை சார்பில் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

அதன் பரபரப்பு அடங்குவதற்குள், எழுத்தாளரும், புகைப்பட கலைஞருமான கார்த்திக் தார்,  சமீபத்தில், சென்ட்ரல் மும்பையில் உள்ள Four Seasons என்ற நட்சத்திர ஹோட்டலுக்கு உணவருந்த சென்றுள்ளார். ஹோட்டல் நிர்வாகம் 2 அவித்த முட்டைகளுக்கு வரி சேர்க்காமல் 1700 ரூபாயும், டயட் கோக்கின் விலை 260 ரூபாய் என சேர்த்து மொத்தம் 6 ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தி எட்டு ரூபாய் என பில் அளித்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் அந்த பில்லின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘2 முட்டையின் விலை ரூ.1700. பணக்கார கோழியாக இருக்கும் போல’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் “சகோதரரே, வாருங்கள் போராட்டம் செய்வோம்” என்று கூறி, ராகுல் போஸையும் டேக் செய்துள்ளார். கார்த்திக் தாரின் இந்த டுவிட்டை, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். இந்த பில், சமூகவலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளதோடு மட்டுமல்லாது, ஹோட்டல்களின் இந்த அநியாய விலைக்கொள்ளைகள் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், வருங்காலத்தில் நமது உணவை தீர்மானித்திருப்பது சுவையின் அடிப்படையில் அல்லாமல், அதன் விலைப்பட்டியலில் தான் இருக்கும் என்பதுபோல பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க சம்பந்தபட்ட ஹோட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ராகுல் போஸின் வாழைப்பழ விலை, தற்போது அவித்த முட்டை விலை விவகாரம், ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரெண்ட் சங்க தலைவர் குர்பாக்ஸிஷ் சிங் கோலி சாலையோர கடையில் ஒரு கப் காபி ரூ. 10 என்ற அளவில் உள்ளது. அதே காபி, 5 ஸ்டார் ரூ.250 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நட்சத்திர மற்றும் உயர்தர ஹோட்டல்களில், உணவுப்பொருட்களுக்கு மட்டும் விலை நிர்ணயிக்கப்படுவதில்லை. ஹோட்டல் அளிக்கும் சேவை, தரம், பயன்படுத்தப்படும் பொருட்கள், உபகரணங்கள், ஊழியர்களின் பங்களிப்பு, அவர்களுக்கே உரித்தான சுகாதார நடவடிக்கைகள், சமையலறைக்கு ஏற்ற சூழ்நிலை உள்ளிட்ட காரணிகளை கொண்டே, உணவு வகைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது  என தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

Saravanan