நடிகர் சங்க தேர்தல் : போட்டியாளர்களின் பட்டியல் வெளியீடு..

share on:
Classic

நடிகர் சங்க தேர்தலில் போட்டியாளர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் விவரம் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி, நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நடிகர் நாசரும், துணை தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோரும போட்டியிட்டனர். பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகர் விஷாலும், பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்திக்கும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், அவர்களை எதிர்த்து போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில், தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார். துணை தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி மற்றும் உதய ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசனும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனிடையே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனு தாக்கலை ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் ஆய்வு செய்தார். இதையடுத்து, அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிக்கு போட்டியிட்ட அனைவருடைய வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விமல், ரமேஷ் கண்ணா, ரஹீம், பாஸ்கரன், டி. ஆர் கிருஷ்ணன் ஆகியோரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

வரும் 14-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு, 23-ஆம் தேதி காலை 7 மணிக்கு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மறுநாளே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan