நரேந்திர மோடி பிரதமராக தேர்வு..!!

share on:
Classic

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நாடாளுமன்ற மைய அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தலைவர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, நரேந்திர மோடி நாடாளுமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சி தலைவர்களான முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் மலர் கொத்துகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பிரதமர் மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.இதைத் தொடர்ந்து, இந்திய அரசியல் சாசனத்தை வணங்கிய பிறகு கூட்டத்தில் தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.-க்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்று கூறிய பிரதமர் மோடி புதிய இந்தியாவை கட்டமைக்க மக்கள் உதவி செய்வார்கள் என்று கூறினார். மேலும், அனைவரும் இணைந்து இந்தியாவின் உயர்வுக்கு பாடுபடுவோம் என்று மோடி உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வழக்கமாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், இந்த தேர்தலில் மக்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என்று கூறினார். அனைவரும் மக்களின் இதயத்தை வெற்றிகொள்ள பணி செய்வோம் என பிரதமர் மோடி உறுதி கூறினார். முன்னதாக, இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பாஜக அரசுக்கு அதிமுக எப்போதும் தங்கள் ஆதரவை அளிக்கும் என்று கூறினார். இதனிடையே, தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சித் தலைவர்களான பாஜக தலைவர் அமித்ஷா, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தனர். இந்நிலையில், வருகிற 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth