2வது முறை பிரதமராகும் நரேந்திர மோடி : வரும் 30-ம் தேதி பதவியேற்பு..?

share on:
Classic

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து, நரேந்திர மோடி, வரும் 30-ம் தேதி 2-வது முறையாக பதவியேற்ககூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஸீ - ஜிம்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் உள்ளிட்ட பல்வேறு உலகத்தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

இந்நிலையில் தேர்தல் வெற்றி பெற்ற பாஜகவின் புதிய எம்.பிக்களை இன்று மாலைக்குள் டெல்லியில் இருக்கும் படி அக்கட்சி உத்தரவிட்டுள்ளது. பின்னர் பாஜகவின் பாராளுமன்ற குழு கூடி மோடியை மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கும் என்று தெரிகிறது. இன்று அல்லது நாளை பாஜக புதிய அரசை அமைக்கும் எனவும், பதவியேற்கும் விழா வரும் 30-ம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2014-ல் நடைபெற்ற பதவியேற்பு விழாவை விட, சிறப்பாக இம்முறை விழாவை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு உலகத்தலைவர்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பதவியேற்பு விழாவிற்கு முன்னர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு சென்று தன்னை 4,75,754 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்த வாக்களார்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தொகுதியில் மொத்தம் 6,69,602 வாக்குகள் பதிவாகின. அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி யாதவ் 1,93,848 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 1,53,803 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya