ரூ.8,000 கோடி கடன் சுமையால், பதவி விலகிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனர்..!

share on:
Classic

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெக்கும் நடவடிக்கைக்காக அதன் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா ஆகியோர் நிர்வாக குழுவில் இருந்து விலகியுள்ளனர்.

இன்டிகோவுக்கு அடுத்து நாட்டிலேயே 2-வது பெரிய விமான நிறுவனமான ஜெட்ஏர்வேஸை, 1993-ஆம் ஆண்டு தனது மனைவி அனிதாவுடன் இணைந்து நரேஷ் கோயல் தொடங்கினார்.

மோசமான விமான பராமரிப்பு, எரிபொருள் சிக்கனமான விமானங்களை பயன்படுத்த தவறியது, முறையற்ற நிதி மேலாண்மை போன்ற பல்வேறு காரணங்களால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் வேகமாக அதிகரித்தது. அந்த நிறுவனத்தின் பங்கு விலையும் படுவேகமாக சரிந்தது.

கடந்த ஆண்டு, வெள்ளி விழாவை கொண்டாடிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், சுமார் ரூ. 8,000 கோடிக்கும் அதிகமான கடன் சுமையால் திவாலாகும் நிலையில் உள்ளது. விமான குத்தகை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரட்ட முடியாததால், தான் பயன்படுத்தும் 119 விமானங்களில் 3-ல் 2 பங்கு விமானங்களின் செயல்பாட்டை ஜெட் ஏர்வேஸ் நிறுத்தியது.

போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் விதமாக தலைவர் பதவியில் இருந்து உடடினயாக விலகுமாறு கடன் வழங்கிய நிறுவனங்கள் நரேஷ் கோயலுக்கு நெருக்கடி கொடுத்து வந்தன.

அதன்படி நிர்வாக குழுவில் இருந்து நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா ஆகியோர் விலகியுள்ளனர். நரேஷ் கோயலுக்கு சொந்தமான நிறுவன பங்குகளும் 52 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதனால் புதிய நிர்வாக குழு அமைக்கப்பட உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை அவசர நிதி வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக டாடா சன்ஸ் போன்ற நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

புதிய நிர்வாக குழு அமைக்கப்படுவதாக செய்தி வெளியானதன் அடிப்படையில் தேசிய பங்குச்சந்தையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு ஏறுமுகம் கண்டது.

News Counter: 
100
Loading...

Ragavan