தமிழ்நாட்டில் நரிக்குறவர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க தனி கடை திறப்பு

share on:
Classic

நரிக்குறவர்கள் விற்கும் ஊசி, பாசி, சங்கம் மணி விற்க தனி கடை திறக்கப்பட்டுள்ளது. 

சாமியோ ஊசிமணி, பாசி மணி, வாங்கிங்கோங்கோ சாமியோவ் என பஸ் நிலையம் ரயில் நிலையம் முன்பு அழுக்கு துணியோடு நின்றுகொண்டு நின்றவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய, வேலூர் மாவட்டம்  திருப்பத்தூர் தூயநெஞ்சக்கல்லூரி மாணவ, மாணவிகள் சமுதாய பணிக்காக அளித்த பணத்தில் திருப்பத்தூர் பாய்ச்சல் அருகே வசிக்கும் நரிக்குறவர்கள் பெண்கள் சுய உதவி குழுவுக்கு 10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கினார்கள்.

அதனை அவர்கள் சரியாக திருப்பி செலுத்தினார்கள். ஆகையால் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பல வகையான மாலைகளை விற்பனை செய்ய திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கடையின் 2 ஆண்டுகளுக்கான வாடகை மற்றும் பணி ஆட்களின் சம்பளமாக நாபர்டு வங்கி ருபாய் 2 லட்சத்து 40ஆயிரம் மானியமாக வழங்கியது. 

இந்த கடை திறப்பு விழாவானது நரிக்குறவர் இன தலைவர் பொண்ணையன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு முன்பு பாசி மணிகள், ஊசி ஆகியவற்றை தெருத்தெருவாகச் சென்று பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் விற்பனை செய்திருந்த நிலை மாறி, இப்போது கடைவாசலில் கலக்கலான பொருட்களை விற்கும் நிலை உருவாகி உள்ளது.

ருத்ராட்ச மணி மாலை, துளசி மணி மாலை, ஸ்படிக மாலை, சந்தன மாலை, கிறிஸ்துவ ஜெபமாலை, முஸ்லிம்கள் தியான மாலை உட்பட 50 வகையான மாலைகளை முழுக்க முழுக்க கையால் செய்கின்றனர் இந்த நரிக்குறவர்கள். 

இங்கிருந்து ஈரோடு, மதுரை, சேலம், கன்னியாகுமரி வரை விற்பனை பகுதிகள் நீள்கிறது.  கேரளாவில் அதிக அளவில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு மாலை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கிறிஸ்துவ ஜெபமாலை ஸ்விட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்பகுதி நரிக்குறவர் இனத்திலிருந்து சென்று 3 பேர் கல்லூரியில் படிக்கின்றனர். தங்களது சுய உதவிக்குழுக்கள் நல்ல நிலையில் முன்னேறிக் கொண்டிருப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் நரிக்குறவர்கள். 

தமிழ்நாட்டிலேயே நரிகுறவர்களுக்கு கடை திறக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

sasikanth