கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையால் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நெம்மேலி மீனவர்கள்..!

share on:
Classic

முன்பெல்லாம் கோடைக்காலம் என்றால் நிழலை மட்டுமே தேடிச்சென்ற நிலை மாறி நீரின்றி வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த பிரச்னையை சரி செய்யக் கொண்டு வரப்பட்ட நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் திட்டமாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...

கோடை காலம் தொடங்கியது முதல் குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்தின் திரும்பும் திசையெல்லாம் தண்ணீர், தண்ணீர் என்ற ஒலிகள் கேட்கத் தொடங்கியுள்ளன. விவசாய கிணறுகள், கல் குவாரிகள் என எங்கும் தண்ணீர் இல்லாத நிலையில், 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி சென்னை குடிநீர் வாரியத்தால் நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இங்கு கடலில் 1,050 மீட்டர் நீளத்திற்கு ஆழ்துளை குழாய் அமைத்து, கடல் நீரில் உள்ள உப்பு அகற்றப்பட்டு நன்னீராக மாற்றப்படுகிறது. மேலும், இயற்கையான நீர் நிலைகள் வறண்டு காணப்படும் நிலையில், செயற்கையாக உருவாக்கப்படும் இந்த தண்ணீரால் உடல் நலனுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்றால் அந்த கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை.

செயற்கையாக எடுக்கப்படும் இந்த குடிநீர் ராட்சத குழாய்கள் மூலம் மக்களை வந்தடையும் நிலையில், பிரிக்கப்பட்ட உப்பு கழிவுகள் மீண்டும் கடலில் சேர்க்கப்படுகின்றன. 2016-ம் ஆண்டு கழிவை கடலில் கலக்க போடப்பட்ட குழாயில் கசிவு ஏற்பட்ட சம்பவம், அப்பகுதி முழுவதும் பரவியது. ஆனாலும் பழுதடைந்த குழாய்கள் இன்று வரை சீரமைக்கப்படவில்லை என்பதே நிதர்சனம். சிறிய ஓடையும் நாளடைவில் ஆறாகும் என்பது போல் சிறிது, சிறதாக வெளியேறிய கழிவு, தற்போது நெம்மேலி பகுதியில் ஆறுபோல் தேங்கியுள்ளது. மேலும், செயற்கையாக உயர்ந்துள்ள கடல் மட்டம், திடீரென ஏற்படும் கடல் சீற்றத்தால் அப்பகுதியை அழித்துவிடும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

மீன்பிடிப்பதன் மூலம் கிடைக்கும் தினசரி வருமானத்தை நம்பி வாழ்க்கையை நகர்த்தி வரும் அப்பகுதி மக்கள், செயற்கையாக அதிகரித்து வரும் உப்பின் தன்மையால் கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்தி பாதிக்கப்படுவதாக வேதனை அடைந்துள்ளனர். மேலும், மீன்பிடிக்க வழக்கத்தை விட அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஊரில் உள்ள அனைவரின் தாகத்தையும் போக்க தொடங்கப்பட்ட இந்த திட்டம், சத்தமின்றி ஒரு ஊரையே அழித்து வருகிறது. தங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா..? என்பதே நெம்மேலி மீனவர்களின் கேள்வியாக உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan