இது காவல் நிலையமா இல்ல வீடா..? ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புதுச்சேரி காவல் நிலையம்..!

share on:
Classic

காவல்துறை உங்கள் நண்பன் அப்படினு சொல்லி கேள்வி பட்டு இருப்பிங்க ஆனா இங்க உண்மையாவே காவல் துறை உங்கள் நண்பன் தான். இது காவல் நிலையமா இல்லை வீடானு சந்தேங்கமா இருக்கு ?  நாட்டின் சிறந்த காவல் நிலையம் பட்டியல்ல நான்காவது இடத்தை பிடிச்சிருக்கு  இந்த நெட்டப்பாக்கம் காவல்நிலையம். 

இலவச வைபை வசதி, குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், நல்ல கழிவறை வசதியால் இந்திய அளவில் 4 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது புதுச்சேரியில் உள்ள நெட்டப்பாக்கம் காவல்நிலையம். 

 

நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்கள்:

2016-ம் ஆண்டு முதல் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், காவலர் சமுதாய பணிகள், கணினி மூலம் பராமரிக்கப்படும் குற்றப்பதிவேடுகள், காவல் நிலையத்தில் பொதுமக்களை வரவேற்கும் முறைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. 

4வது இடத்தில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலையம்:

அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாட்டின் சிறந்த 10 காவல்நிலையங்களின் பட்டியலை நேற்று அறிவித்தார். இதில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த நெட்டப்பாக்கம் காவல்நிலையம் இந்திய அளவில் 4-ம் இடம் பிடித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2017-ம் ஆண்டு நடைமுறையை கணக்கில் கொண்டு,  தற்போது சிறந்த காவல்நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதில் நெட்டப்பாக்கம் காவல்நிலையம், தூய்மை  குற்றம் மற்றும் குற்றவாளிகள் நடத்தை கண்காணிப்பு  அமைப்பை (சிசிடிஎன்எஸ்) பயன்படுத்தும் விதம் உள்ளிட்ட அம்சங்களிலும் சிறப்பிடத்தைப் பிடித்து, நாட்டின் 4-வது சிறந்த காவல்நிலையமாக தேர்வாகியுள்ளது. நெட்டப்பாக்கம் காவல்நிலையம் 1990-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. 

 

 

காவல் நிலையமா? வீடா :

தற்போது ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர்கள், 3 துணை சப்இன்ஸ்பெக்டர்கள், 4 தலைமை காவலர், 15 காவலர், 3 பெண் காவலர்கள் என 28 பேர்  பணியாற்றி வருகின்றனர். இந்த காவல் நிலையம் சென்றாலே காவல் நிலையமா? வீடா என்று கேட்க தோன்றும். ஏனென்றால் காவல்நிலையத்தின் வெளிச்சுவரில் 15 அடி உயரத்தில் மகாத்மா காந்தியின் படமும், மார்பளவில் அப்துல் கலாம் படமும் நம்மை வெகுவாகக் கவர்கின்றன. 

மிகச் சிறந்த கழிப்பறை வசதி:

காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் அறைகளில் கண்களைக் கவரும் வகையில் வண்ணத்துபூச்சி போன்ற ஓவியங்கள் சுவற்றை அலங்கரிக்கின்றன. 
இங்கு வருபவர்கள் பயன்படுத்த ஏதுவாக இலவச வை-பை வசதியும் உண்டு. ஆண், பெண் கழிப்பறைகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. பெண் போலீஸாருக்கென தனி ஓய்வறையும், தனி கழிப்பறை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. 

உமன் டெஸ்க் :

பெண் புகார்தாரர், பெண் குற்றவாளிகளை விசாரிப்பதற்கு "உமன் டெஸ்க்" என்ற பெயரில் தனி அறை ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.  அனைத்திலும் மேலாக, இங்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் விளையாடுவதற்கென பொம்மைகள், விளையாட்டு உபகரணங்களுடன் தனி அறையும், அந்த அறையில் குழந்தைகளுக்கான கார்டூன் படங்களும் ஒட்டப்பட்டிருப்பது குழந்தைகளை குதூகலமூட்டும் வகையில் இருக்கிறது.   அதுமட்டுமின்றி காவல் நிலையத்தில் உள்ள விசாரணை அறை, ஆயுத கிடங்கு, மகளிர் உதவி மையம், கணினி அறை, வரவேற்பாளர் என ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு பெயர் பலகைகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. மேலும் காவலர் கட்டுப்பாட்டு அறை, தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ், எஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சைல்டு லைன் போன்ற முக்கிய எண்கள் அடங்கிய பெயர் பலகை காவல் நிலையத்தின் முகப்பில் பொதுமக்கள் வசதிக்காக பொருத்தப்பட்டுள்ளது. 

 

பல விழிப்புணர்வு வாசகங்களும், காவல்துறைக்கான 11 கட்டளைகளும் அடங்கிய பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. காவல் நிலையத்துக்குட்பட்ட நெட்டப்பாக்கம், கரியமாணிக்கம், சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.  காவல்துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தைக்கு நெட்டப்பாக்கம் காவல்நிலையம் ஒரு சிறந்த உதாரணம் என்றே கூறலாம்.

News Counter: 
100
Loading...

sasikanth