அமேசான் பிளிப்கார்ட்டில் இனி ஆஃபர் கிடையாது.. மத்திய அரசு செக்..

share on:
Classic

அமேசான், பிளிப்கார்ட் போன்ற அந்நிய நேரடி முதலீடு கொண்ட இணையதள வணிகங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுத்து, பாரபட்சத்துடன் குறிப்பிட்ட நிறுவனங்களின் பொருட்களுக்கு மட்டும் வழங்கும் கேஷ் பேக், ஆஃபர் போன்றவற்றிற்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.  

மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதள வணிகங்கள் வாடிக்கையார்களை கவரும் வகையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்கள் மீது அதிகப்படியான ஆஃபர், கேஷ் பேக் கொடுக்கிறது. 

இனி இது போன்ற சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் பாரபட்சத்துடன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன் பிளஸ், எம்ஐ, ஹானர் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பிரத்தியோகமாக விற்பனை செய்யும் வர்த்தக யுக்தியை இனி செயல்படுத்த முடியாது. குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தாங்களோ அல்லது தங்களது துணை நிறுவனங்களோ பங்கு வைத்துள்ள விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். 

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய வர்த்தக அமைச்சகத்தின் திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை நிறுவனங்கள் கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிசர்வ் வங்கியிடம் கணக்கு காண்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் விளைவாக ஒன் பிளஸ், எம்ஐ, ஹானர், ஓப்போ, ரியல்மீ போன்ற கைபேசிகள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் முதலில் அறிமுகப்படுத்தப்படும் வழக்கம் இனி முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது. மேலும் இந்த இணையதளங்கள் தனது மொத்த விற்பனையில் 25 சதவீதத்திற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்து வாங்கும் பட்சத்தில் அந்த விற்பனையாளரை நிறுவனம் கட்டுப்படுத்துவதாக கருதப்படுவதுடன் அந்த விற்பனையாளர் தொடர்ந்து இணையதளங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கும் அனுமதிக்கப்படாது.

அந்திய நேரடி முதலீடு இந்தியாவில் துளிர்விட்ட காலத்தில் இருந்து, குறு வணிகர்கள், சில்லறை தொழிலார்கள் எதிர்த்து குரல் கொடுத்து வந்த நிலையில், இத்திட்டம் சரிவர கடைபிடிக்கப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind