ஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு

share on:
Classic

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகிய அரசியலமைப்பு பிரிவை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற புதிய யூனியன் பிரதேசங்களையும் உருவாக்கியது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருவதால் பாதுகாப்பு படை வீரர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டனர். மேலும் முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் காஷ்மீர் மக்களை தூண்டிவிடும் நிலையில், ஏன் நாம் அங்குள்ள பாதுகாப்பு படைகளை திரும்ப பெற வேண்டும்..? அங்குள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் எண்ணம் அரசுக்கு இல்லை” என்று தெரிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுவதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

காஷ்மீரில் போடப்பட்ட 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டதாக கூறிய அவர், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படுவதாகவும் தெரிவித்தார். ஒருபுறம் காஷ்மீரில் அமைதி நிலவவில்லை என்று பாகிஸ்தான் உலகத்திற்கு சொல்ல முயற்சிக்கிறது. தற்போது எதிர்க்கட்சிகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் விதமாக பேசுகின்றன. இது தவறான அணுகுமுறை” என்று தெரிவித்தார். 

News Counter: 
100
Loading...

Ramya