ரூ. 10,00,000 சம்பாத்தியத்திற்கு வரி கட்டாமல் தப்புவது எப்படி?... இதோ சூப்பர் ஐடியா

share on:
Classic

ஆண்டிற்கு ரூ. 10,00,000 சம்பாதித்தாலும் கூட வரி கட்டுவதிலிருந்து இனி எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும். 

இடைக்கால அமைச்சரின் இடைக்கால பட்ஜெட்:
தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எப்போது தான் சலுகை மாற்றம் வருமோ? என உச்சுக்கொட்டி காத்திருந்த நடுத்தர சம்பளதாரர்களின் காதுகள் ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போன்று இப்போது குளிர்ந்துள்ளது. இதற்குக் காரணம், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் இடைக்கால பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதே ஆகும். ரூ. 5,00,000 வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு வரி கிடையாது என மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தவுடன் சமூக வலைதள டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது மோடி சர்கார். இது மட்டுமல்ல, பியூஷ் கோயல் இனி நிரந்தர நிதியமைச்சராகவே இருக்கட்டும் என்றும், அருண் ஜேட்லி மருத்துவமனையிலேயே இருக்கட்டும் எனவும் சில நக்கல் சாமானியர்ஸ் கிசுகிசுப்பதையும் நம்மால் கேட்க முடிகின்றது. அந்தளவிற்கு நடுத்தர சம்பளதாரர்கள் வயிற்றில் பாலை வார்த்துள்ளார் கோயல்.

 

வரியே கிடையாது :
வருடத்திற்கு ரூ. 5,00,000 வருமானத்திற்கு வரி இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஆண்டிற்கு ரூ. 10,00,000 வருமானம் ஈட்டினால் கூட நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா?... ஆமாம், அது தான் உண்மை. உதாரணத்திற்கு, நீங்கள் ஆண்டுக்கு ரூ. 10,00,000 சம்பளம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதில், 
80சி பிரிவின் கீழ் ரூ. 1,50,000 விலக்கு
நிலையான கழிவு ரூ. 50,000
வீட்டுக்கடன் வட்டி ரூ. 2,00,000
தேசிய ஒய்வூதிய திட்டத்திற்கான (NPS) பங்களிப்பு ரூ. 50,000
சுகாதார காப்பீட்டு பிரீமியம் ரூ. 50,000
                மேற்கண்ட இந்த அனைத்தையும் கூட்டினால் ரூ. 5,00,000 வரை நமக்கு ஆதாயம் கிடைத்து விடும். இதில், மீதமுள்ள ரூ. 5,00,000-ற்கு மட்டும் வருமான வரி ரூ. 12,500-ஆக இருந்தாலும் அதனை 87ஏ பிரிவின் கீழான வரித்தள்ளுபடியின் அடிப்படையில் ரூ. 12,500-ஐ கழித்து விடலாம். இதனால் நீங்கள் ஆண்டிற்கு ரூ. 10,00,000 சம்பாதித்தாலும் ஒரு பைசா கூட வரி செலுத்த வேண்டியத் தேவை இல்லை. ஐயோ ஜாலி...!

 

வணக்கமா?... சுபமா?...
’மிகச்சிறந்த பட்ஜெட் இது’ என மத்திய அரசு மார்தட்டிக் கொண்டாலும், ’நாடாளுமன்றத்  தேர்தலை முன்னிட்டு பாஜக கையில் எடுத்துள்ள பிரம்மாஸ்திரம் தான் இந்த இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு’ என விமர்சித்து வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர். எது எப்படியோ, தேர்தல் முடிந்ததற்கு பிறகு போடப்படும் முழு பட்ஜெட்டை பொறுத்தே மக்களின் ’வரிசுமைக் குறைப்பு கனவு’ அமையும். ஆனால், மக்களின் பிரச்சனைகள் ’வணக்கம்’ போட்டு மீண்டும் தொடங்குமா? அல்லது ’சுபம்’ போடப்பட்டு முடிவிற்கு கொண்டுவரப்படுமா என்பதை ’திரைப்படம்’ போல் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

News Counter: 
100
Loading...

mayakumar