தண்ணீர் பஞ்சத்தின் உச்சம் : பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி நிறுவனங்கள் அறிவுரை..!!

share on:
Classic

தண்ணீர் பிரச்சனை காரணமாக சென்னை ஓ.எம்.ஆர்-ல் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர். 

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெயில் காணப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் தண்ணீர் பற்றக்குறையும் நிலவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மற்ற இடங்களில் அவ்வபோது மழை பெய்து வந்தாலும், சென்னையில் சுமார் 200 நாட்களுக்கு மழை என்பது பெயருக்குக் கூட பெய்யவில்லை. இதன் காரணமாக நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததால், சென்னைவாசிகள் தண்ணீர் பிரச்சனையால் திண்டாடி வருகின்றனர். 

பழைய மகாபலிபுரம் சாலை எனப்படும் ஓ.எம்.ஆர்-ல் நிலைமை மோசமாக, நிலத்தடி நீர் வராத காரணத்தால் அவர்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையை பயன்படுத்தி தனியார் தண்ணீர்  வழங்கும் நிறுவனங்கள் விலையை தாறுமாறாக ஏற்றியுள்ளனர். இதனால் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அண்டை மாநிலங்களான ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இடமாறுதல் வாங்கி சென்னையை காலி செய்து வருகின்றனர். தலைநகரத்தில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் இங்கு வியாபாரம் செய்பவர்களும், சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஓ.எம்.ஆர்-ல் ஐடி நிறுவனங்கள் அடுத்த 100 நாட்களுக்கு தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர். அங்குள்ள12 கம்பெனிகளில் பணிபுரியும் சுமார் 5,000 என்ஜினியர்கள் தங்கள் வசதியான இடத்திலிருந்து வேலை செய்யலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேபோல், சோழிங்கநல்லூரில் உள்ள ஃபோர்டு பிசினஸ் சர்வீஸ் நிறுவனம், தங்கள் பணியாளர்களை குடிநீரை கொண்டுவரும் படி அறிவுறுத்தியுள்ளது. தங்களுக்கு தேவையான தண்ணீர் அளவில் 55% நீரை மட்டுமே நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

சென்னையில் மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் பிரச்சனை ஓரளவு குறைக்கப்படும். மேலும் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சனைக்கு அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், வாழத் தகுதியில்லாத இடங்களில் சென்னையும் இடம்பெறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.!!

 

News Counter: 
100
Loading...

Ramya