கடந்த 3 மாதங்களில் 132 கிராமங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை..!!

share on:
Classic

உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்” என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வந்தாலும் கூட உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் புதிதாக பிறந்த குழந்தைகளில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட மாஜிஸ்திரேட் டாக்டர். அசிஷ் சவுகான் பேசிய போது “ பெண் குழந்தைகளின் பிறப்பு எண்னிக்கை பூஜ்யமாகவோ அல்லது ஒற்றை இலக்கத்திலோ இப்பகுதிகளில் உள்ளது. இந்த பிறப்பு விகிதம் எதனால் பாதிக்கிறது என்று நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதற்கு பின்னால் உள்ள காரணத்தை கண்டறிய விரிவான ஆய்வு நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் கல்பனா தாகூர் “ கடந்த 3 மாதங்களில் இந்த கிராமங்களில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை. இது வெறும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. இந்த கிராமங்களில் பெண்சிசுக் கொலை நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அரசும், நிர்வாகமும் எதுவும் செய்வதில்லை” என்று அவர் குற்றம்சாட்டினார்.
 

News Counter: 
100
Loading...

Ramya