சிறப்பு அந்தஸ்து நீக்கம் : ஜம்மு காஷ்மீருக்கு இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் பயணம்..

share on:
Classic

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று அங்கு சென்று பார்வையிட உள்ளனர். 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியில் நேற்று முன் தினம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சிறை பிடிக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தனர். இந்த சூழலில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று காஷ்மீருக்கு சென்று பார்வையிட உள்ளனர். ராகுல் காந்தியை தவிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில்  குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த ஷர்மா ஆகியோர் இன்று ஸ்ரீ நகருக்கு செல்ல உள்ளனர். ஏற்கனவே குலாம் நபி அசாத் ஜம்மு விமான நிலையத்தில் இரண்டு முறை தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அவர் செல்ல உள்ளார்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, திமுக சார்பில் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி சார்பில் மனோஜ் ஜா மற்றும் தினேஷ் திரிவேதி ஆகியோரும் அந்த குழுவின் பிரதிநிதிகளாக உள்ளனர். எனினும் இதுவரை அம்மாநிலத்தில் எந்த அரசியல் தலைவர் நுழைவதற்கும் அனுமதி வழங்கப்பட வில்லை. ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை நேற்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீ நகருக்கு செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது. எதிர்க்கட்சியினரின் வருகை படிப்படியாக நிலைமை சீராகி வரும் நிலைமையை தொந்தரவு செய்யும் விதமாக அமையும் என்றும் அந்த துறை டிவிட்டரில் பதிவிட்டது.

முன்னதாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உட்பட சுமார் 400 அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Ramya