பாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..?

share on:
Classic

இந்தியா - பாகிஸ்தான் என்றாலே மோதல் தான்.. அந்த மோதல் இந்திய சுதந்திர தினத்தை, பாகிஸ்தான் அரசு கருப்பு தினமாக அனுசரிக்கும் அளவிற்கு, தற்போது வலுப்பெற்றுள்ளது. இதன் தாக்கம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் காணலாம். 

போர், மோதல், குற்றச்சாட்டுகள் போன்ற பல நிகழ்வுகள், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான உறவை தொடர்ந்து பாதித்து வருகின்றன. இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஜம்மு - காஷ்மீரீல், புல்வாமா என்ற பகுதியில் இந்திய ராணுவ படை வீரர்கள் சென்ற வாகனம் மீது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பலியாயினர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய ராணுவம், பாலகோட் பகுதியில் நடத்திய தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய சம்பவம் நாட்டையே உலுக்கியது. பல பேச்சுவார்த்தைகள், வார்த்தை போர்களை அடுத்து அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தின் போது அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கையாண்ட விதமும், மேலும் அவரை சித்தரிக்கும் வகையில் வெளியிடப்பட்ட விளம்பரங்களும் பல சர்ச்சைகளை கிளப்பியதோடு, இரு அரசிகளுக்கிடையேயான உறவில் விரிசலையும் அதிகரித்தது.

இந்த நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் அமைந்ததும் பல திட்டங்களை நடைமுறைபடுத்த துவங்கியது. முத்தலாக்கிற்கு எதிரான திட்டத்தை நடைமுறைபடுத்தியதும், இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அமைதி என்ற பாதையில் பயணிக்க மறுப்பதாகவும் பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியிருந்தது. 

இந்நிலையில், காஷ்மீரீல் நடைமுறையில் இருந்த சட்டப்பிரிவு - 370 நீக்கப்படுவதாகவும், மேலும் ஜம்மு & காஷ்மீரை இரண்டாக பிரித்து, லடாக் என்ற புதிய யூனியன் பிரதேசம் உருவாக்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு, பாகிஸ்தான் அரசினை கொந்தளிக்க செய்தது. இது அரசியல் வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள மாபெரும் தவறு என குற்றம்சாட்டியதுடன், பல உலக நாடுகளிடமும் இதுகுறித்து முறையிட்டார் இம்ரான்கான். ஆனால் ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் எங்களால் தலையிட முடியாது என நட்பு நாடுகள் கை விரிக்க, இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி பாகிஸ்தான் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டதுடன், பல வீடுகளிலும் கருப்பு கொடிகளை கட்டி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதுதொடர்பாக ட்வீட் செய்ததுடன், தனது ஃப்ரொபைல் பிக்சரை கருப்பு நிறமாக மாற்றி தனது எதிர்ப்பினை தெரிவித்தார். இதனிடையே அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சில பெண்கள், இந்திய ராணுவம் அப்பாவி தீவிரவாதிகளை கொன்று குவிப்பதாக தெரிவித்துள்ளனர். இது பெரும் சர்ச்ச்சையாகி, சமூக வலைதளங்களில் முழுவதும் பகிரப்பட்டு, ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. பாகிஸ்தானின் இந்த செயல்பாடுகளால், ஏற்கனவே வணிக மற்றும் நட்பு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இரு நாட்டின் உறவும், என்றும் சரிசெய்ய முடியாத அளவிற்கு தொடர்ந்து விரிசலை சந்தித்து வருகிறது.

 

News Counter: 
100
Loading...

Saravanan