பாகிஸ்தானை பறக்க விட்ட இந்திய படை..!

share on:
Classic

இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..! 

இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினர். பாகிஸ்தான் அணி பீல்டிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை. ஆட்டத்தின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா அளித்த ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டது, அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை நாளா புறமும் பறக்க விட்டனர்.

இந்நிலையில், தொடக்க வீரர்களின் நிதானமான ஆட்டத்தால் 18 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. இந்திய வீரர்களின் ரன் விகிதத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் அணி திணறிய நிலையில் ராகுல் 57 ரன்கள் சேர்த்து பாபர் ஆசமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கோலியுடன் இணைந்து ரோஹித் சர்மா தனது சதத்தை நிறைவு செய்தார். அதில் 9 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ஒரு நாள் போட்டியில் அதிக சிக்ஸ்ரகள் அடித்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். பாண்டியா வந்தவேகத்தில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். 48-வது ஓவரில் 5-வது பந்தை முகமது அமீர் பவுன்ஸராக வீச அது கோலியின் தலைக்கு மேல் சென்றது. அந்த பந்தை ஆட முயற்சிக்க அது பேட்டில் படாமல் கீப்பர் கையில் தஞ்சம் அடைந்தது. பந்து பேட்டில் பட்டதாக நினைத்து அம்பயர் அவுட் தரும் முன்னரே கோலி தாமாகவே 77 ரன்களில் வெளியேறினார். கோலி 57 ரன்களை கடந்த போது அதிவேகமாக 11,000 ரன்கள்  சேர்த்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்

பின்னர் கேதர் ஜாதவ், விஜய் சங்கருடன் சேர்ந்து பெரியதாக ரன் ஏதும் சேர்க்கவில்லை. 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 336 ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் அபாரமான சதம், ராகுல், கோலியின் அரைசதம் ஆகியவை இந்திய அணி இந்த கடின இலக்கை எட்ட முக்கிய காரணமாக அமைந்தது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் விஜய் சங்கரால் LBW முறையில் அவுட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். தமிழக வீரரான விஜய் சங்கர் பங்குபெற்ற முதல் உலகக்கோப்பை ஆட்டத்தில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி இந்திய அணிக்கு சாதனை பெற்றுத்தந்துள்ளார். பாகிஸ்தான் அணியின் பாகர் ஜமான் மற்றும் பாபர் ஆசாம் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர்கள் வெளியேறி பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் DLS முறையில் 50 ஓவர் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு 302 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் மட்டுமே சேர்த்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி சார்பில் விஜய் ஷங்கர், குல்தீப் யாதவ், ஹார்டிக் பாண்டியா தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். 140 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான உலகக்கோபையில் பாகிஸ்தான் அணியின் தோல்வி பயணம் இந்த உலகக்கோப்பையிலும் தொடர்கிறது.

News Counter: 
100
Loading...

Saravanan