பனை ஓலையில் கைவினைப்பொருட்கள் : அசத்தும் பனைத்தொழிலாளி

share on:
Classic

ஸ்ரீவைகுண்டம் அருகே பனை ஓலையில் தாஜ்மஹால் உள்ளிட்ட கலைப்பொருட்களைச் செய்து, பார்வையாளர்களை அசத்திவருகிறார் பனைத்தொழிலாளி பால்பாண்டி. 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் பனை ஏறும் தொழிலாளி. இவர் கருங்குளம் பகுதியில் பனை ஏறுவதும், மற்ற நேரங்களில் விவசாயத்தையும் கவனித்துவருகிறார்.  பனை ஓலையில் பல விதமாக கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் கொண்ட பால்பாண்டி, பனை நார்களைக் கொண்டு கட்டில், பாய் உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ளார். தமது படைப்புகளை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல விரும்பிய பால்பாண்டி,  கண்காட்சியில் வைக்கும் அளவுக்கு ஓலையில் பல விதமான பொருள்களை செய்ய திட்டமிட்டார்.  அதன்படி, சுமார் 3 அடி உயரத்தில், ஸ்தூபிகளுடன் கூடிய அழகிய தாஜ்மஹால், விமானம், பேரலாயம், கோபுரங்கள், வில்லு வண்டி, யானை, நார்பெட்டி, கல்லாபெட்டி, மிளகு பெட்டி, கிலுக்கு உள்பட பல பொருள்களை கலைநயத்தோடு உருவாக்கியுள்ளார். 

பனையின் பயன்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டேன் என்று கூறும் பால்பாண்டி,  பனை ஓலை மற்றும் நார் மூலமாக கைவினைப்பொருள்களை உருவாக்கி  தமது வீட்டில் காட்சிக்கு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். கல்வி நிலையங்கள் உள்பட பல இடங்களுக்கும் இவற்றைக் கொண்டு சென்று, பனைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சிகள் வைப்பதே தமது அடுத்த திட்டம் என்றும் பால்பாண்டி மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

admin