கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் மீது போலீஸ் தடியடி..! பலர் படுகாயம்..!

share on:
Classic

போதுமான பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் பயணிகள் சிலருக்கு மண்டை உடைந்தது.

வாக்குப்பதிவையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். பயணிகள் வருகை அதிகரிப்பால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், வெளியூர்களுக்கு போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சென்ற காவல்துறையினருடனும் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். காவல்துறையின் தடியடியில் பயணிகள் சிலருக்கு மண்டை உடைந்தது, சிலருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. காவல்துறையின் நடவடிக்கைக்கும், அரசின் மெத்தனப்போக்குக்கும் கண்டனம் தெரிவிப்பதாக பயணிகள் தெரிவித்தனர். மேலும், வெளியூர்களுக்கு சென்ற பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பேருந்துகளின் படிகளில் தொங்கியபடியும், மேற்கூரைகளின் மீது அமர்ந்தபடியும் பயணிகள் பயணம் செய்தனர்.

போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பயணிகள் கூறினர். மேலும், சில தனியார் பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பில் ஈடுபட்டதாகவும் புகார் தெரிவித்த பயணிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

News Counter: 
100
Loading...

Ragavan