தொடர்ந்து குறையும் பெட்ரோல் விலை..நிம்மதியில் வாகன ஓட்டிகள்..

share on:
Classic

சென்னையில் கடந்த 54 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் 79 காசுகள் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி உச்சத்தின் உச்சமாக பெட்ரோல் விலை  லிட்டர் 87 ரூபாய் 33 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 4-ந் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு 1ரூபாய் 50 காசுகள் குறைத்தது. இதனால் தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல் மீதான தங்களது வரியையும் சற்று குறைத்தன. இதனால் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது. 

அதன் அடிப்படையில் சென்னையில் கடந்த 54 நாட்களில் பெட்ரோல் 10 ரூபாய் 79 காசுகள் குறைந்துள்ளது. மேலும், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் ஒரு காசுக்கும், டீசல் 71 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனை  செய்யப்படுகிறது . தற்போது தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள்  சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind