பிளாஸ்டிக் தடை சாத்தியமா?...

share on:
Classic

அடுத்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜனவரி 1 முதல் தமிழக அரசின் பிளாஸ்டிக்  தடை உத்தரவு வெற்றி பெருமா? என்பது மிகப்பெரிய வினாவாக எழுந்துள்ளது. 

பிளாஸ்டிக் தடை:
பிளாஸ்டிக் பொருட்கள் மீது சிறியவர்கள் முதல் பெரியர்கள் வரை அதீத பிரியம் உண்டு. அழகழகாக பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த பிளாஸ்டிக் பைகள் நம் உலகை பெருமளவு ஆட்கொண்டுள்ளது. இதன் காரணமாக நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. பல நாடுகளில் இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக அரசும் 2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டி பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நம்மை அறியாமலே நாம் பல பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்து வருகிறோம். பிளாஸ்டிக் தடை சாத்தியா? என்ற கேள்வியும் பலரது மனதில் தற்போது எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கான பதில் ஆம்! மட்டுமே...

மீண்டும் மஞ்சப்பை:
தமிழகத்தின் பல்வேறு சிறிய மற்றும் பெரிய கடைகள் தற்போது பேப்பர் பைகளுக்கு மாறியுள்ளனர். சிலர் வீட்டில் இருந்தே பை கொண்டுவரும் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளையும் வழங்கி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் வீட்டில் இருந்தே மஞ்சப்பையை எடுத்துக்கொண்டு கடைகளுக்கு செல்லுவதையே நம் பாட்டி, அம்மா வழக்கமாக கொண்டிருந்தனர். உலகமயமாக்களுக்கு பிறகு பெரும் மாற்றம். பிளாஸ்டிக் உபயோகிக்க சுலபம் என்பதாலும், மஞ்சப்பைகளை கெளரவ குறைச்சலாகவும் பலர் பார்க்கத் தொடங்கினர். அதன் முடிவு இன்று நம் உலகையே சீரழித்துள்ளது. ஆனால், தற்போது பல விழிப்புணர்வுகள் மூலம் மீண்டும் மஞ்சப்பைகளை காண முடிகின்றன. 

பெற்றோர்களே உஷார்:
பள்ளி செல்லும் குழந்தைகள் வாட்டர் பாட்டில் முதல் லன்ச் பாக்ஸ் வரை பல வண்ணங்களினால் ஆன பிளாஸ்டிக்கையே உடல் நலனிற்கு தீங்கு என்பதை அறியாமல் உபயோகித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் போது உணவை கொண்டு செல்ல பிளாஸ்டிக்கால் ஆன டப்பாக்களையே பெரிதும் பெற்றோர் உபயோகிக்கின்றனர். சூடான பொருட்களை பிளாஸ்டிக் டப்பாவில் வைக்கும் போது அது நச்சுப்பொருளாக மாறி உணவின் தன்மையை மாற்றி அமைக்கக்கூடியது. குழந்தைகளை கவரும் வகையில் வாட்டர் பாட்டில்களும் பல டிசைன்களில் கிடைப்பதால் அவர்களும் அதையே தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், பிளாஸ்டிக்கை நீண்ட காலமாக உபயோகித்தால் அதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களால் கேன்சர், தோல் சம்மந்தப்பட்ட நோய்கள், நுரையீரல் பாதிப்பு, கண்பார்வை பாதிப்பு என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய அவலம் உள்ளதாக உலக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களில் உணவுகளை தருவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

உலகை மீட்போம் வாருங்கள்:
பிளாஸ்டிக் நம் உடல்நலனை மட்டுமல்ல நாம் வாழும் பூமியையும் பாழ்படுத்தி விடுகிறது. நாம் குப்பை என நினைத்து வீசும் அழிவில்லா பிளாஸ்டிக் நம் நிலத்தையும், நீர் வளத்தையும் அழித்து வருகின்றது. குறிப்பாக, கடலின் தன்மையையும் மாற்றுகிறது.

இதன் காரணமாக கடல் வாழ் உயிரினங்களும் பாதிப்படைந்துள்ளதாக கடல்சார் ஆய்வாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். நம்மையும் நாம் வாழும் பூமியையும்  ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதை தவிர வேறு வழியில்லை என்பதே நமக்கு முன்பாக இருக்கும் ஒரே முடிவு.... அது தான் ஒரே விடிவும் கூட...

News Counter: 
100
Loading...

mayakumar