ஜி-20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி..!!

share on:
Classic

ஜப்பானில் ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. இதனிடையே, பல்வேறு நாடுகளின் அதிபர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி - 20 கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம், ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் தனித்தனியாக சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்னைகள் குறித்தும் விவாதித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, ஈரான் விவகாரம், 5 ஜி தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒப்பந்தங்கள், வர்த்தக உறவுகள் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் பிரதமர் மோடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். உள்கட்டமைப்பு, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது பேசிய மோடி, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் முதல் எழுத்துக்களை சேர்த்து படித்தால் ஜெய் என்ற சொல் உருவாகும் என்றும், ஜெய் என்றால் வெற்றி என பொருள் எனவும் விளக்கினார். 

இதுமட்டுமின்றி தென் கொரிய அதிபர் மூன் ஜெ இன், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பல தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இதனிடையே, ஜி-20 மாநாட்டின் ஒருபகுதியாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு கூடியது. இதில் பேசிய மோடி, பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், பயங்கரவாதத்தை ஒழிக்க பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இதைத்தொடர்ந்து 20 நாடுகள் பங்கேற்கும் ஜி-20 மாநாட்டின் முதல் நாள் கூட்டம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரையும் சந்தித்து இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தனித் தனியே பேச்சுவார்த்தை நடத்தினார்.

News Counter: 
100
Loading...

vinoth