நெல் ஜெயராமன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய அமைப்பினர் இரங்கல்

share on:
Classic

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க வாழ்நாளை அர்ப்பணித்து பாடுபட்ட நெல் ஜெயராமன் காலமானார். அவருக்கு வயது 50.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக நெல் ஜெயராமன் சிகிச்சை பெற்று வந்தார். வேளாண் ஆர்வலர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் அவருக்கு நிதியுதவி அளித்து சிகிச்சைக்கு உதவி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 5.10 மணிக்கு நெல் ஜெயராமன் உயிர் பிரிந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டையில் உள்ள அவரது நண்பர் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலை 11 மணிக்கு பிறகு சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் ஆதிரங்கம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு நாளை இறுதி சடங்குகள் நடைபெற இருக்கின்றன.

சென்னை தேனாம்பேட்டையில் நெல் ஜெயராமனின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.  பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல் கண்காட்சி நடத்தி இளைஞர்களுக்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நெல் ஜெயராமனின் இழப்பு விவசாயிகளுக்கு மாபெரும் பேரிழப்பு என்று தெரிவித்தார்.

மறைந்த நெல் ஜெயராமனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நெல் ஜெயராமன் கண்டுபிடித்த நெல்களுக்கு காப்புரிமையும் பாதுகாப்பையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நெல் ஜெயராமன் அவர்கள் விட்டுச்சென்ற பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றுவதும், பெருக்குவதுமே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

நெல் ஜெயராமனின் இறப்பு விவசாயிகளுக்கு ஒரு பேரிழப்பு என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவலனை இழந்து விட்டார்கள் என நெல் ஜெயராமனின் இறப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு நாளையொட்டி மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

sasikanth