பொள்ளாச்சி சம்பவம் : தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் வகுப்புகளை புறக்கணித்து ஈடுபட்ட உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர்.

சென்னையை அடுத்துள்ள தாம்பரம் அருகே கெளரிவாக்கம் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோன்று, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி, 2,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் செய்யதுங்நல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் திமுக மகளிர் அணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது பொள்ளாச்சி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரி வீரமணி என்ற பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்களை தடுக்கும் விதமாக, பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதேபோன்று, பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

News Counter: 
100
Loading...

Ragavan