உனக்கு 36, எனக்கு 26... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா திருமணம்...!

share on:
Classic

நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா இடையே மலர்ந்த காதல் இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது. தங்களது காதல் உருவான கதையை இந்த ஜோடி முதன்முறையாக பகிர்ந்துள்ளது... 

பிரியங்கா சோப்ரா:
பீகார் மாநிலத்தில் 1982-ஆம் ஆண்டு பிறந்த பிரியங்கா சோப்ரா மாடலிங்கில் மகத்தான மகுடம் சூடிய கையோடு முதன்முறையாக கால்பதித்த திரைத்துறை கோலிவுட். 2002-ல் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருந்த ’தமிழன்’ படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார். இதன்பிறகு, வளர்த்துவிட்ட தமிழ் திரையுலகில் எட்டிப்பார்க்காத பிரியங்க சோப்ரா பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பினார். முன்னணி ஹோரோக்களுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து அசத்திய பிரியங்கா ஹாலிவுட் சினிமாவை நோக்கிய பயணத்திலும் வெற்றி கண்டார். இதுவரை 126 விருதுகளை வென்றுள்ள பிரியங்கா 73 விருதுகளுக்காக பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளார். 

நிக் ஜோனஸ்:
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 1992-ஆம் ஆண்டு பிறந்தவர் நிக் ஜோனஸ். இசை மீது ஈடு இணையில்லா ஆர்வம் கொண்டிருக்கும் ஜோனஸ் பாப், பாப் ராக், ஆர்&பி என பல்வேறு இசை வகைகளில் வல்லவராக திகழ்கிறார்.  தற்போதைய நிலவரப்படி பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழும் நிக் ஜோனஸ் கொடுத்துள்ள ஹிட் பாடல்களும் ஏராளம், அவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். பெரும்பாலான காதலர்களின் காதல் கதை எப்படி தொடங்குமோ அதேபோன்று தான் இவர்களது காதல் கதையும் ஆரம்பித்தது...

காதல் மலர்ந்த கதை:
பிரியங்காவிற்கும் ஜோனஸுக்கும் நெருக்கமான மியூச்சுவல் நண்பர் ஒருவர் மூலமாக இவர்கள் இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. ’பாலிவுட்டில் நான் தான் டாமினேஷன்’ என பிரியங்காவும், ’பாப் உலகில் இப்போதைய மைக்கேல் ஜாக்ஸன் நான் தான்’ என ஜோனஸும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டனர். ஒரு நாள், மாலை மங்கும் நேரத்தில் பிரியங்காவிற்கு டுவிட்டர் மூலம் மெஸேஜ் அனுப்பினார் ஜோனஸ் . இந்த பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸை பக்காவாக புரிந்துகொண்ட பிரியங்கா தன்பங்கிற்கு பதில் மெஸேஜ்களை அனுப்பத் தொடங்கினார். இவர்களது டுவிட்டர் கான்வர்சேஷன் வளர வளர சோப்ரா - நிக் காதலிப்பதாக கிசிகிசுக்கள் பரவின. கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில்,  ’நாம் டேட்டிங் செல்லலாமா’ என ஜோனஸ் கேட்க, அதற்கு சோப்ராவும் பச்சைக்கொடி காட்ட, இவர்களது காதலும் முதலாவது கரையைக் கடந்தது. 

ஒருமுறை, பார்ட்டியில் ஈடுபட்டிருந்த ஜோனஸ் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் மண்டிட்டு, ’பிரியங்கா கிடைத்தால் தமது வாழ்நாள் முழுவதுமே பார்ட்டியாக இருக்கும்’ என உரக்கக் கத்தினார். இது பிரியங்காவின் காதுகளையும் எட்டுவதற்கு தவறவில்லை. அவரது மனதில் முதன்முறையாக காதல் எட்டிப்பார்க்கவும் தவறவில்லை. ஜோனஸை தன் அப்பார்ட்மெண்ட்டிற்கு அழைத்துச் சென்ற பிரியங்கா தமது தாயிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார். மகள் ஃபாரினர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்ததைக் கண்டதும் வெகுண்ட அவர், பின்னர் சமகால நாகரீக வளர்ச்சியை மனதில் கொண்டு ஜோனஸை சிம்ப்பிளாக ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்ததன் பின் ஓராண்டாக பிரியங்காவும், ஜோனஸும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே இருந்தனர். ஒரு வருட காத்திருப்பிற்கு பிறகு லாஸ் ஏஞ்சலெஸில் நடைபெற்ற  தமது  ’பியூட்டி அண்டு த பீஸ்ட்’ இசை கான்ஸர்ட் நிகழ்ச்சிக்கு பிரியங்காவை அழைத்தார் ஜோனஸ். இந்த அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரியங்கா 365 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு ஜோனஸைக் கண்டதும் இனம் புரியாத ஆனந்தம் கொண்டார். 

பிரியங்காவுடன் இணைந்து 3-வது முறையாக டேட்டிங் சென்றதன் பிறகு தன்னுடைய தாய்க்கு பிரியங்காவை அறிமுகம் செய்து வைத்தார் ஜோனஸ். அப்போது, ’இவரைத் தான் கரம்பிடிக்கப் போவதாக’ பிரியங்காவிற்கே தெரியாமல் ரகசியமாக தன் தாயிடம் தெரிவித்தார் . இதற்கு அடுத்த நாளே, கார் ஓட்டிக்கொண்டே பிரியங்காவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்திய அவர் ரிசல்ட் என்னவென தெரியாமல் ஸ்பீட் பிரேக்கர் மேல் ஏறிய வாகனம் போல தடுமாறிக் கொண்டிருந்தார். சில வினாடி யோசனைக்கு பிறகு பிரியங்கா ’ரியலி’ என தலையை அசைக்க இரு இதயம் ஒரு இதயம் ஆனது.... இதனால் இதில் எந்தவொரு இதயமும் நொறுங்காமல் போனது. இந்த புரொப்போஸல் குறித்து பேசிய பிரியங்கா, ’எனக்கும் வெட்கம் வரும் என்பதை ஜோனஸ் மூலமாகவே உணர்ந்தேன். மற்ற பெண்களுக்குள் இருக்கும் நாணத்தை என்னையும் அவர் உணர வைத்தார்’ என கூறினார். 

உனக்கு 36, எனக்கு 26:
நிக் - பிரியங்கா திருமணத்தை முன்னிட்டு ஜோத்பூர் பகுதியே விழாக்கோலம் பூண்டது. நட்சத்திரங்களின் அடுத்தடுத்த அணிவகுப்பின் நடுவே மெஹந்தி, சங்கீத் என திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் களைகட்டின. ஒருவழியாக,  26 வயதாகும் நிக் ஜோனஸ், 36 வயதாகும் பிரியங்கா சோப்ராவை கரம்பிடித்தார். 10 வயது குறைவான ஜோனஸை திருமணம் செய்துள்ள பிரியங்கா எண்ணற்ற கனவுச்சிறகுகளுடன் கேட்வாக் நடைபோட்டு வருகின்றார். காதலில் ஆரம்பித்து இப்போது திருமணத்தில் முடிந்துள்ள இவர்களது காதல் கதை முடிவில்லா பயணமாக தொடர வேண்டும் என்பதே சோப்ரா - நிக் ரசிகர்களின் வாழ்த்தாக உள்ளது.
 

News Counter: 
100
Loading...

admin