பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம்..!

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர், கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களது படங்களை துடைப்பத்தால் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினர்.

இதேபோல், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் பேரணியாக சென்றனர். அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த வலியுறுத்தி அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

News Counter: 
100
Loading...

vinoth