3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டங்கள் : வன்முறையில் 12 பேர் காயம்..

share on:
Classic

3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள சம்பல் என்ற கிராமத்தில் 3 வயது சிறுமிக்கு சாக்லேட்களை கொடுத்து, தனியாக அழைத்து சென்று, அருகில் உள்ள பள்ளியில் வைத்து 20 வயது இளைஞர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. ஸ்ரீ நகர் - முசாஃபர்பாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பொதுமக்களின் வாகனங்கள் சேதமடைந்தன. 12 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவருக்கு கடுமையாக காயமடைந்ததால், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. எனினும், காஷ்மீர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். 

இதனிடையே பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த காஷ்மீர் டிவிஷனல் கமிஷ்னர் பஷீர் அகமது கான், விரைவில் விசாரணை நடத்தி சிறுமிக்கு நீதி வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தெரிவித்த இதுதொடர்பாக மேலும் பலரை விசாரித்து வருவதாகவும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ramya