தமிழக அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா.? துன்புறுத்துவதா.? நீதிபதிகள் கேள்வி...

share on:
Classic

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றால் அந்த ஆலையை எதிர்த்து போராடுபவர்களை துன்புறுத்துவது ஏன் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் என்பவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கும் தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், துணை ஆட்சியரும் 107 மற்றும் 111 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும், சிலரிடம் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும் தெரிவித்துள்ளனர். இதுபோல சம்மன் அனுப்பி பொதுமக்களை தொந்தரவு செய்தது சட்டவிரோதமானது என்பதால், சம்மன்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதோடு, அவர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த தடைவிதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சுந்தர், ஹேமலதா அமர்வு விசாரித்தனர். அப்போது, சட்டவிரோத கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாக இருக்கும் நிலையில், அதே கருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதோடு, அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? என நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது எனவும், புதிதாக சம்மன்களை அனுப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan