தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் திட்டம் : காங்கிரஸ் காரிய கமிட்டி என்ன முடிவெடுக்கும்..?

share on:
Classic

காங்கிரஸின் உச்ச அதிகாரக்குழுவான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்ட இன்று கூடவுள்ள நிலையில், ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதில் காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த படுதோல்விக்கு 100 சதவீதம் பொறுப்பேற்பதாக ராகுல்காந்தி தெரிவித்தார். மேலும் உத்திரப்பிரதேசம், கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 2வது முறை படுதோல்வியடைந்ததால் ராகுல்காந்தி பதவிவிலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல்களும் இம்முறை காங்கிரஸ் கட்சிக்கும் அதிகரித்துள்ளன. 
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உச்ச அதிகார குழுவான காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதில் மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இன்றைய கூட்டத்தில் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆதரவுக்குரல், எதிர்ப்புக்குரல் சேர்ந்தே ஒலிக்கும் நிலையில், ராகுலின் ராஜினாமாவை அக்கட்சி ஏற்குமா என்று இன்றைய கூட்டத்திற்கு பின் தெரிய வரும். 
 

News Counter: 
100
Loading...

Ramya