தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!

share on:
Classic

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.  

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், இரவில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த மழை சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் இரண்டு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில்  திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி, வில்பட்டி, அப்சர்வெட்டரி, பம்பரபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்ததில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.  இதில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். கனமழை காரணமாக உளுந்தூர்பேட்டை பகுதியின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

 

News Counter: 
100
Loading...

aravind