வெப்ப சலனம் காரணமாக ஒருசில பகுதிகளில் கோடை மழை..!

share on:
Classic

கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, மேல்மங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கிய சாரல் மழை, சற்று நேரத்திலேயே சூறைக்காற்றுடன் கூடிய கனமழையாக மாறியது. இதனால் வெள்ளநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது

செங்கோட்டையில் இடியுடன் கூடிய பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அக்னி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில், திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியதால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் சூறை காற்றுடன் கனமழை பொழிந்தது. இதனால் வத்திராயிருப்பு பகுதியின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.மேலும் நகர் பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பகல் நேரங்களில் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் கீழ் மலைப்பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கடுகுதடி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அவ்வப்போது பெய்த ஆலங்கட்டி மழையால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind