நிரந்தர எதிரி யாரும் இல்லை...! ரஜினி இல்லத்திருமணத்தில் அரசியல் தலைவர்கள்

share on:
Classic

ரஜினிகாந்த்துடன் அரசியல் களத்தில் மல்லுக்கட்டவுள்ள தலைவர்கள் பலரும் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர்.  

அரசியல் நாகரீகம்:
’ரத்தம் சிந்தாத போர்க்களம் தான் அரசியல்’ என பேச்சுவழக்கில் சிலர் கூறக் கேட்டிருப்போம். பொதுவெளியிலும், தேர்தல் நேரங்களிலும் எலி - பூனை போல சண்டை போடுபவர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வார்கள். ஏன் இப்படி? என்று யாராவது கேட்டால் ’அரசியல் நாகரீகம்’ என்ற பெயரில் சமாளித்து விடுவார்கள். இந்த சமாளிப்பானது தற்போது ரஜினிகாந்த் இல்லத்திருமண நிகழ்ச்சியையும் விட்டுவைக்கவில்லை. 

அமைச்சரவை Vs. சூப்பர்ஸ்டார்:
’ரஜினிகாந்த் என்னதான் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் அவர் அரசியலில் இறங்குவது சரியாக இருக்காது’ என அமைச்சர்கள் பலரும் தெரிவித்திருந்தனர். மேலும், சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்து சினிமாவில் மட்டுமே என்றும், அரசியலில் ஸ்டாராக ஜொலிப்பது இயலாத காரியம் எனவும் அமைச்சர்கள் சிலர் அவ்வப்போது கூறி வந்தனர். இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர்களை நோக்கி ரஜினியும் சூசகமாக கருத்துக்கணைகளை அள்ளி வீசி வந்தார். ஆனால் இப்போது, சௌந்தர்யாவின் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை ரஜினியுடன் கைகுலுக்கி சிரித்து மகிழ்ந்தது. 

 

உலக நாயகன் Vs. சூப்பர்ஸ்டார்:
’மய்ய அரசியலே சிறந்தது’ என கமலும், ’ஆன்மீக அரசியலே தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும்’ என ரஜினியும் 2 துருவங்களாக நின்று ஏகோபித்து வருகின்றனர். ரஜினியின் அரசியல் கருத்துக்களுக்கு பதிலளிப்பதில் கமலும், கமலின் எதிர்கருத்துக்களுக்கு முரண்பதில் கொடுப்பதில் ரஜினியும் ஒருபோதும் துவண்டு போனதில்லை. திரையுலகில் நண்பர்களாக இருக்கும் இவர்கள் அரசியல் களத்தில் பிரதான எதிரிகளைப் போல் தான் சித்தரிக்கப்படுகிறார்கள். கமலும் ரஜினியும் இணைந்துவிட்டால் தமிழக அரசியலை புரட்டிப்போட்டு விடலாம் என எங்கோ ஒர் மூலையில் ரசிகர் கூட்டம் ஒன்று எதிர்பார்த்து காத்துள்ளது. இது நடப்பது அரிதினும் அரிதான நிகழ்வு என்றாலும் ரசிகர்களின் கனவுக்கோட்டை கலைந்தபாடில்லை. இந்த நிலையில், ரஜினியின் இல்லத்திருமணத்தில் கமலும் கம்பீரமாக கலந்துகொண்டு தனது நிழல் எதிரியை நேருக்கு நேர் சந்தித்தார். 

 

தலைவர் வந்துட்டார்ல:
எவர் இந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறார்களோ இல்லையோ... ’வைகோ எந்த கட்சியில் கால் வைக்கப்போகிறார்?’ என்ற பில்லியன் டாலர் கேள்வி தமிழக அரசியல் அரங்கை ஆட்கொண்டுள்ளது. இதற்குக் காரணமாக, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ’மக்கள் நலக்கூட்டணி’ மூலமாக விஜயகாந்திற்கு வைகோ வைத்த ஆப்பைக் கூறலாம். திமுக-வை எதிர்த்து ரஜினி குரல் எழுப்ப முயன்றால் போதும் உடனே அபாயக்குரலுடன் வீதிக்கு வந்துவிடுவார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆனால் அவரும் ரஜினியின் வீட்டுத்திருமன வைபவத்தில் இணைந்துகொண்டார்.  

 

ஸ்டாலின் வருகை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், ரஜினியும் நீண்ட கால நண்பர்கள் என்பது தமிழர்களுக்கு தெரிந்த ஒன்றே. இருந்தாலும், அரசியலில் திமுக-விற்கு எதிரான நிலைப்பாட்டுடனேயே ரஜினிகாந்த் நடந்துகொள்வதாக கூறப்படுவதை எவராலும் மறுக்க முடியாது. இந்த சிறிய மனக்கசப்பு ஒருபுறமிருந்தாலும் ஸ்டாலின் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். 

 

 

News Counter: 
100
Loading...

mayakumar