ஜியோ ஃபைபர் சேவை அடுத்த மாதம் தொடக்கம்... அதிர்ச்சியில் DTH நிறுவனங்கள்

share on:
Classic

அடுத்த மாதம் முதல் இலவச 4K தொலைக்காட்சியுடன் கூடிய 'ஜியோ ஃபைபர்' சேவை தொடங்கப்படும் என முகேஷ் அம்பானி அதிரடியாக அறிவித்துள்ளார். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 42வது ஆண்டுப்பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இக்கூட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும் அப்பேற்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்திற்கே கடன் பிரச்னை இருப்பதாகவும், ஆனால் இந்த நிலையானது கூடிய விரைவில் மாற்றம் அடையும் என்றும் கூறினார். அடுத்த 18 மாதங்களில் ஒரு ரூபாய் கூட கடன் இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய அத்தியாயம் படைக்கும் என்றார்.

கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் மிகப்பெரிய மற்றும் லாபம் கொழிக்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் திகழ்வதாகவும் தெரிவித்தார். ஜியோ தொலைதொடர்பு சேவையில் தற்போது வரை 340 மில்லியனுக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் இணைந்திருப்பதாகவும், வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியன்று ஜியோ லாஞ்ச் செய்யப்பட்டதன் 3ம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதை முன்னிட்டு வரும் செப்டம்பர் 5ஆம் தேதியன்று ஜியோ ஃபைபர் திட்டம் தொடங்கப்படும் என்ற மாபெரும் அறிவிப்பையும் முகேஷ் அம்பானி வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜியோ ஃபைபர் சேவை மூலமாக கிடைக்கப்பெறும் இணைய வேகம் மகத்தான அளவில் இருக்கும் என்றும், குறைந்தபட்சம் 100Mbps-ஆகவும், அதிகபட்சம் 1Gbps-ஆகவும் இணைய சேவை கொடுக்கப்படும் எனவும், பொருளாதார முன்னேற்றம் கண்ட நாடான அமெரிக்காவில் கூட சராசரி இணைய வேகம் 90Mbps தான் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

இது மட்டுமின்றி, ஜியோ ஃபைபர் சேவையின் ஆரம்பக்கட்டணம் 700 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 10,000 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டது. ஜியோ ஃபைபர் பயனாளிகளுக்கு செட்டாப் பாக்ஸ்+ஹெச்.டி.4கே டிவி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அடுத்தடுத்து தடாலடி அறிவிப்புகளை அள்ளி வீசினார். மேலும், ஒருமுறை பணம் செலுத்தினால் போதும் Landline வாய்ஸ் கால் சேவையை சந்தாதாரர்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக அனுபவிக்கலாம் என்றும் அறிவித்தார். 

ஜியோ பிராட்பேண்ட் சேவை 12 மாதங்களில் நிறைவடையும் என்றும், ரிலையன்ஸின் oil-to-chemical பிரிவில் சவுதி நாட்டைச் சேர்ந்த அராம்கோ நிறுவனம் 20% முதலீடு செய்யவிருப்பதாகவும், இதன் வர்த்தக நிறுவன மதிப்பு 5.35 லட்சம் கோடி ரூபாய் எனவும் அம்பானி கூறினார். 

கடந்தாண்டில் அதிக வரி செலுத்திய மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் விளங்குவதாகவும், டிஜிட்டல் வளர்ச்சியை முன்னிறுத்தி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்படவிருப்பதாகவும், இனி வரும் ஆண்டுகளிலும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார். இறுதியாக, ஜம்மு-காஷ்மீருக்குள் கால்பதிக்கும் எண்ணம் இருப்பதாகவும், இதற்காக பிரத்யேக டாஸ்க் குழு அமைத்து ஜம்மு-காஷ்மீர் மக்களின் மனநிலை மற்றும் தொழில் தொடங்கும் தன்மை குறித்து ஆராயப்படும் என்றும் முகேஷ் அம்பானி கூறினார். 

முகேஷ் அம்பானியின் இந்த அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் மதிப்பு 9% வரை சரசர உச்சத்தைத் தொட்டது. ஏற்கனவே, தொலைதொடர்பு துறையில் ஜியோ என்ற சேவையை அறிமுகப்படுத்தி அனைத்து போட்டி நிறுவனங்களையும் கதிகலங்க வைத்தது. இதற்கு அடுத்தபடியாக, ஜியோ ஃபைபர் என்ற தற்போதைய சேவையால் எதிர்காலத்தில் டிடிஎச் நிறுவனங்களும், கேபிள் டிவிக்களும் இல்லாமல் போய்விடும் என்பதே நிதர்சனமான உண்மை...

News Counter: 
100
Loading...

mayakumar