ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவால்...? அதிர்ச்சியில் அனில் அம்பானி

share on:
Classic

கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் அனில் அம்பானிக்குச் சொந்தமான ’ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

அண்ணன் என்னடா தம்பி என்னடா...
’செல்வாக்கும் பணமும் கொழித்து காணப்படும் இந்திய குடும்பம் எது?’ என்று கேட்டால் அதற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூறும் ஒரே பதில் அம்பானி குடும்பம். அந்தளவிற்கு லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி. இவரது நிலைமை இப்படியிருக்க, மறுபுறம் முகேஷின் சகோதரர் அனில் அம்பானியின் நிலையோ பரிதாபகரமானதாக காணப்படுகிறது. எந்த தொழில் தொடங்கினாலும் அதில் வெற்றி பெற்று கோலோச்சுவது முகேஷின் பாணியாக இருக்கும் அதே நேரம், எந்த தொழில் தொடங்கினாலும் அதில் தோல்வியை சந்தித்து கடனாளியாவது தான் அனிலின் பாணி. இத்தகைய இக்கட்டான நிலையில் சிக்கித் தவித்து வரும் அனில் அம்பானியின் சாம்ராஜ்யம் இப்போது திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

 

திவால்:
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமம் கடந்த சில ஆண்டுகளாகவே பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதில் எத்தனை கோடியை முதலீடு செய்தாலும் அனிலுக்கு மிஞ்சுவது என்னவோ நஷ்டம் மட்டுமே. இந்த நஷ்டத்தை சரிகட்டுவதற்காக ரூ. 45,000 கோடி அளவிற்கு பிறரிடமிருந்து கடன் பெற்றார் அனில். ஆனால், இம்முறையும் எதிர்பார்த்த அளவு வர்த்தகம் நடைபெறாததால் அந்த மொத்த  கடனையும் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிதவியென தவித்து வருகிறார். இந்நிலையில், கடனை அடைக்கும் முயற்சியாக தமது நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 45,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக அனில் அம்பானி அறிவித்துள்ளார். மேலும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும், திவால் குறித்த அதிகாரபூர்வ பதிவினை மேற்கொள்வதற்காக தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தை (NCLT) நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அனில் தரப்பு வட்டாரம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

 

ஜியோவாக மாறும் கம்யூனிகேஷன்ஸ்:
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 18 மாதங்களாகவே எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. இதனால் முதலீட்டாளர்களின் கோபக்கணைகள் ஓரணியில் இணைந்து அனில் அம்பானியை குறி வைத்து சீறிப்பாய்ந்தன. இதன் விளைவாகவே திவால் குறித்த முடிவை மேற்கொண்டுள்ளார் அனில் அம்பானி. இதனிடையே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் ’ஸ்பெக்ட்ரம்’ உரிமையை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் விற்பனை செய்யவும் முடிவெடுத்துள்ளார் அனில் அம்பானி. இதுமட்டுமின்றி, இன்னும் பல சொத்துக்களையும் உரிமைகளையும் ஜியோ நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முடிவு செய்தது. ஆனால், நினைத்தபடி ஜியோ நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகி இருப்பதால் என்ன செய்வதென தெரியாமல் குழம்பி நிற்கின்றார் அனில். 

 

’எரிக்ஸன்’ அடைந்த எரிச்சல்:
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டு ஸ்வீடன் தொலைதொடர்பு நிறுவனமான எரிக்ஸன் ’நொடிப்புநிலை’ (Insolvency) அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், அனில் அம்பானி ரூ. 550 கோடி ரூபாய்க்கும் அதிகமான  கடன் தொகையை திருப்பிச்செலுத்தத் தவறி விட்டதாக எரிக்ஸன் நிறுவனம் குற்றம்சாட்டியிருந்தது. இதைத்தொடர்ந்து, எரிக்ஸன் நிறுவனம் அளித்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்டு அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால், இவ்விவகாரம் இந்திய அளவில் பூதாகரமாக வெடித்துச் சிதறியது. 

 

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய காங்கிரஸ்:
ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் அம்பானிக்கு ஆதாயம் தரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் கடும் குற்றச்சாட்டை சுமத்திய வண்ணமிருந்தனர். இந்த நிலையில், தற்போது நஷ்டத்தில் தவித்து வரும் அனில் அம்பானிக்கு உதவுவதற்காக பிரதமர் மோடி ’மேலுமொரு பாதுகாப்புத்துறை சம்பந்தமான ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்து தருவாறா?’ என விமர்சனம் கலந்த கேள்வியை எழுப்பியுள்ளது காங்கிரஸ் தலைமை. காங்கிரஸ் கட்சியின் இந்த விமர்சனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வட்டாரத்தில் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதாக அமைந்துள்ளது. 

 

ஹலோ சகோ:
முகேஷ் அம்பானியின் ஆசை மகளது திருமணம் அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் திரையுலகினர் உட்பட பலரும் திரளாக கலந்துகொண்டிருந்தனர். இந்த திரளான கூட்டத்தில் ஒருவராக அனில் அம்பானியும் இன்பம் பொங்கும் முகத்துடன் கலந்துகொண்டிருந்தார். என்னதான் அண்ணன் தம்பிக்குள் மனக்கசப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும் திருமண நிகழ்ச்சியில் முகேஷும் அனிலும் ஆனந்தமாகவே காணப்பட்டனர்.

இந்தளவு நெருக்கம் காட்டும் முகேஷ் ’எதற்காக அனிலுக்கு நிதி உதவி செய்ய மறுக்கிறார்?’ என்ற வெகுசன கேள்வி பொதுமக்களிடம் எழுவதையும் நம்மால் பார்க்க முடிகின்றது என்பதே நிதர்சனம். 

 

News Counter: 
100
Loading...

mayakumar