ரெப்போ-வில் மாற்றமில்லை... பதற்றத்தில் ரிசர்வ் வங்கி?...

share on:
Classic

ரெப்போ விகிதம் மாற்றமின்றி தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், வங்கிகளிடமிருந்து வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வாங்கியுள்ள மக்கள் செலுத்தும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படாத சூழல் உருவாகி உள்ளது.  

நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம்:
நாட்டில் மொத்தமுள்ள பணப்புழக்கம் மற்றும் நிதியியல் சார்ந்த தரவுகள் குறித்து நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும், தலா 2 மாதங்கள் இடைவெளியில், மொத்தம் 6 முறை நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். ரிசர்வ் வங்கி ஆளுநரின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் குறுகிய கால வங்கிக்கடன் மீதான வட்டி விகிதம் மற்றும் வங்கியிருப்பு வட்டி விகிதம் உள்ளிட்ட பல்வேறு வட்டி விகிதங்கள் நிர்ணயம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு, இறுதி முடிவு அறிவிக்கப்படும். 

 

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை:
ஏற்கனவே 4 கூட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் 5-வது நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் பேசிய ஆளுநர் உர்ஜித் பட்டேல், 

"ரெப்போ வட்டி விகிதம் எந்தவித மாற்றமும் இல்லாமல் 6.50%-ஆக தொடரும். இதேபோல், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6.25%-ஆக மாற்றமின்றி தொடரும். 2018-19ஆம் நிதியாண்டிற்கான மொத்த  உள்நாட்டு உற்பத்தி விகிதம் (GDP) பழையபடி 7.4%-ஆக கணித்திருக்கிறோம். ஜி.டி.பி விகிதத்தின் கணிப்பை மாற்ற வேண்டாம் என்பதில் நானும் துணை ஆளுநர்களும் ஒற்றைக்கருத்தை எடுத்துள்ளோம். கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் 3.3%-ஆக உள்ளது. இது எதிர்பாராத ஒரு சரிவாகவே பார்க்கப்படுகிறது. அக்டோபரில் வகுக்கப்பட்ட கொள்கையால் கச்சா எண்ணெய் விலை 30% வரை குறைந்துள்ளது. உணவு சாரா தயாரிப்புப் பொருட்கள் சந்தையில் மிகப்பெரிய அளவில் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது” இவ்வாறு கூறினார்.

 

பங்குச்சந்தையில் தாக்கம்:
ஆர்.பி.ஐ நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் முடிந்ததும் பங்குச்சந்தையில் மருந்துப்பொருட்கள், உலோகம் மற்றும் வங்கி உள்ளிட்ட 3 துறைகளின் பங்குகள் மதிப்பு கணிசமான சரிவை சந்தித்தன. ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாததே இந்தளவு சரிவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 100 புள்ளிகளும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 300 புள்ளிகளும் சரிவடைந்தன.  

 

மத்திய அரசு Vs. ரிசர்வ் வங்கி:
நாட்டின் பொருளாதாரம் பின்தங்கியதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர்களின் தவறான போக்கே காரணம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அண்மையில் குற்றம்சுமத்தியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தவறுகள் அனைத்திற்கும் மத்திய அரசு தான் காரணம் என ஆர்.பி.ஐ ஆளுநர்கள் தெரிவித்தனர். இதனால் ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 7-ஐ பயன்படுத்தி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவிநீக்கம் செய்யப்படும் வாய்ப்பு அதிகரித்தது.

 

 

இதன் பிறகு, இரு தரப்பு அதிகாரிகளும் நேரில் சந்தித்து பேசியதன் மூலம் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைத்தது. இந்த குழப்பத்திற்கு நடுவே தற்போது 5-வது நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar